முற்றுவித்து எழுந்தருளிப் பேரொளிப் பிலத்தின் அயலே குற்றமில்லாத அறம் முப்பத்திரண்டனையும் அருள் காரணமாக வளர்ப்பவராய் முப்புராரியை இவ்வாறே எண்ணில் அடங்காத பல நாட்கள் எமது பெருமாட்டியார் பூசனையைப் புரிந்து வாழ்வுறும் நாளில்’ அன்னணம் அளவில் காதல் அருச்சனைத் திறத்தின் ஓங்க மன்னிய மறைநூல் வாய்மை ஆகம வழியிற் பேணும் தன்னிகர் இமயம் ஈன்ற மதரரித் தடங்கண் செவ்வாய் மின்னிடைக் கொருநாள் அங்கண் நிகழ்ந்தது விளம்ப லுற்றேன். | அவ்வாறு அளவில்லாத விருப்பம் பூசனைச் சார்பின்கண் மிக நிலைத்த வேதாகம விதி வழியிற் போற்றும் இமாசலன் மகளார்க்குப் பூசனையில் நிகழ்ந்த நிகழ்ச்சியை விளம்பத் தொடங்கினேன். பண்டுபோற் கம்பை யாற்று மணிப்புனல் படிந்து மெய்யிற் கண்டிகை நீறு தாங்கிக் கடப்படு நியமம் ஆற்றித் தொண்டினில் வழாது பூசைத் தொழில்தலை நின்று காதல் மண்டவே கம்ப னாரை மஞ்சனம் ஆட்டுங் காலை. 365 | முன்பு போலக் கம்பா நதியில் நீராடித் திருமேனியில் உருத்திராக்கமும் வெண்ணீறும் அணிந்து அனுட்டானம் முடித்துக் கொண்டு தொண்டினில் மாறுபடாமல் பூசனையில் முனைத்து நின்று பேரன்பு பொங்கத் திருவேகம்பரைத் திருமுழுக்காட்டும் பொழுது, மருமலர்த் தனிமா நீழல் வள்ளலார் மேன்மேல் அன்பு பெருகிய கருத்தி னாட்குப் பேரருட் கருணை கூர்ந்த ஒருதிரு விளையாட் டாலே பத்தியின் உறுதி நோக்கித் திருவருள் புரிவான் எண்ணி இதுதிரு வுள்ளஞ் செய்தார். 366 | ஒற்றை மாமரத்தின் நீழலில் எழுந்தருளி யுள்ள வள்ளலார் அன்பு பெருகிய எண்ணமுடைய அம்மையார்க்குப் பேரருட் கருணை மிகுந்த ஒப்பற்ற திருவிளையாட்டினால் பத்தியின் உறுதியைக் கண்டு திருவருளை வழங்க மதித்து இவ்வாறு திருவுள்ளங்கொண்டனர். இறைவன் கம்பாநதி பெருக்கெடுத்து வரச் செய்தல் விழுமிய அண்டத் துள்ளும் புறத்தினும் விரவுந் தீர்த்தம் முழுவதும் ஒருங்கு நண்ண முன்னினார் முன்ன லோடும் ஒழுகுநீர்க் கம்பை யாற்றி னுடன்விராய்க் கடைக்கால் வெள்ளம் எழுவது கடுப்ப எல்லாப் புனலும்வந் திறுத்த வன்றே. 367 | சிறந்த இந்த அண்டத்துள்ளும் புறவுலகினும் உறையுந் தீர்த்தங்கள் யாவும் ஒருங்கு திரண்டு வர நினைத்தார். நினைத்தபோதே ஊழிக் காலத்து வெள்ளம் எழுவது போல ஊறுகின்ற நீரினையுடைய கம்பா நதியுடன் கலந்து எவ்விடத்துள்ள புனலும் வந்து தங்கின. |