மிடைவானவர் திசைகாவலர் புவிமேலவர் காணூஉக் கடைநாள் அணு கிற்றாலென வெருவிக்கலுழ் கண்ணீர் இடையாறென விரவக்கொடு வேகத்தொடும் எவ்வெப் புடைநீர்களும் உடனாகிய கம்பைப்புனல் வருமால். 368 | செறிந்த விண்ணோரும், எண்டிசைக் காவலரும், மண்ணவரும் கண்டு உலகம் அழியு நாள் வந்தது என அஞ்சி அழுதலான் ஆய கண்ணீர் உபநதியென வந்து கலக்க மிகு வேகத்தோடும் எவ்விடத்து நீரும் கூடிய கம்பா நதி நீர் விரைந்து வரும். படலைக்கரு முகிலும்இடை இடையேபட ரொளிசேர் தொடலைக்கதிர் உடுவுந்துவ ளுறுபாசடை விரவும் இடையில்திகழ் மலரும்என இலகக்கக னமும்உட் படமிக்கெழு பரவைப்புனல் பயமுற்றிட வருமால். 369 | பரப்புடைய கரிய மேகங்களும் அவற்றின் இடைஇடையே பரவுகின்ற ஒளியுடைய நட்சத்திரங்களும், குழைகின்ற பசிய இலைகளும் இடை இடையே சுலவி விளங்கும் மலர்களும் போலக் காட்சி தர வானமும் உள்ளடங்க மிக்கெழு பரப்புடைய நீர் பயன் விளைய (பயப்பட) வரும். அடிநேடிய திருமாலென இருமாநிலம் அகழும் முடிநேடிய மலரோனென விண்மேற்செல முடுகும் கடவாமுரண் இருவோரெதிர் கனலாயெழும் உருவம் உடையானென விரைசெலபுனல் கீழ்மேலுற நிலையும். 370 | சிவபிரான் திருவடியைத் தேடிய திருமாலைப் போல மிகப்பெரிய பூமியை அகழும்; திருமுடியைத் தேடிய பிரமனைப் போல விண்ணிடத்து விரையும்; கைவிடாத மாறுபாட்டை யுடைய அவ்விருவர் முனை நெருப்பு வடிவாய் எழுந்த வடிவுடைய சிவபிரான் என விரைந்து செல்கின்ற நீர் கீழும் மேலும் பொருந்த நிலை பெறும். வாழைக்கனி பலவின்கனி மாவின்கனி நெடிய தாழைக்கனி அகில்குங்குமம் நிறைசந்தனம் மலர்தேன் வேழத்துணி முதல்இன்னன கொடுமேவலின் உமையாள் ஊழிற்புரி பூசைக்குரி யவைஉய்ப்பவர் உறழும். 371 | வாழைப்பழமும், பலாப்பழமும், மாம்பழமும், நீண்ட தென்னையின் இளநீர்களும், அகிலும், குங்குமமும், சந்தனமும், மலரும், தேனடைகளும், கருப்பந் துண்டங்களும், இவை போல்வன பிறவும் கொண்டு வருதலின் உமையம்மையார் முறைப்படி செய்யும் பூசனைக்குரிய பொருள்களைக் கொண்டு வருபவரை ஒக்கும். |