| 		| இருபாலினும் மணிதங்கிய இருகோடு படைத்து வெருவார்களும் வெருவித்துயர் மேவத்தவ உரறி
 மருவார்குழல் உமைஅச்சுற வரலான்உயர் கம்பை
 பெருமான்எதிர் பண்டெய்திய பெருவேழமும் நிகரும்.    372
 |       இருபுறனும் முத்துடைய இருதந்தங்கள் உடைத்தாய் அச்சுறாதவர்களும்     அஞ்சித் துன்புறப் பெரிதும் ஒலித்து, மணந்தங்கிய கூந்தலையுடைய
 உமையம்மையார் அஞ்சும்படி வருதலால் உயர்ந்த கம்பாநதி சிவபெருமான்
 எதிர், முன்னர் முடுகி வந்த ஆபிசாரயாகத்துத் தோன்றிய பெரிய
 யானையையும் ஒக்கும். இருமருங்கும் மணிகளை ஒதுக்கிய கரைகளை
 யுடைத்தாய்ப் பெரிதும் ஒலி செய்து வருதலை யானைக்கும் நதிக்கும்
 சிலேடையாக்கினார்.
 அம்மையார் இறைவனைத் தழுவிக்கொள்ளுதல்	 அறுசீரடி யாசிரிய விருத்தம்	 		| மலைபடு வளங்கள் வாரி மணிபல வரன்றிப் பொங்கி அலைஎறிந் திரைத்து விம்மி விசும்பெலாம் அடைத்துப் பம்பித்
 தலைவரு வெள்ளந் தன்னைத் தடவரை பயந்த திங்கட்
 கலைநிறை வதனத் தேவி காண்டலும் வெரூஉக்கொண் டாளால்.  373
 |       மலைபடு திரவியங்களை முகந்து கொண்டு பல்வகை மணிகளையும்     அரித்துக்கொண்டு அதிகரித்து அலை வீசி ஒலித்துப் பூரித்து விசும்பு
 முற்றவும் இடங்கொண்டு செறிந்து தலைப் பொடு வருகின்ற வெள்ளத்தை
 இமய மன்னன் மகளாராகிய முழுமதியனைய முகமுடையார் கண்டு அஞ்சினர்.
 		| புடையுறும் இகுளை மாரும் பொள்ளென அச்சம் பூப்பத் தடைபடா தணுகு நீத்தந் தனைஎதிர் நோக்கி நோக்கிக்
 கடல்கிளர்ந் தனைய வெள்ளங் காரண மின்றி என்னே
 விடையவன் பூசை நாப்பண் மேவிய வாறென் றெண்ணி.   374
 |       சூழும் பாங்கிமாரும் விரைய வெருவுற முட்டுறாது விரையும்    வெள்ளத்தைப் பல்கால் பார்த்துக் கடல் பொங்கினாற் போல வெள்ளம் ஓர்
 காரணமின்றி சிவபெருமானார் பூசையின் இடையே மேவிய வகை என்னே!
 என்றெண்ணி,
 		| என்னுடைத் தீங்கு தன்னாற் பூசனைக் கிடையூ றாகத் துன்னிய திதுவாம் என்று சொல்லருங் கவலை கூர்ந்து
 சென்னியின் மதியம் வைத்தார் திருவடி இதயத் தெண்ணும்
 முன்னர்அப் பெருநீர் வெள்ளம் முடுகிவந் தடுத்த தாக.   375
 |       ‘யான் செய்த பிழையால் பூசனைக்கிடையூறாக வந்த திதுவாகும் என்று    சொல்லுதற் கரிய கவலை மிக்குப் பெருமானார் திருவடிகளை மனத்துட்
 கொள்ளு முன்னர் அப்பெரிய நீர்ப்பெருக்கு விரைந்து வந்தணுகிற் றாக.
 |