தழுவக் குழைந்த படலம் 689


இறைவன் தழுவக் குழைதல்

மணிமுலைக் குவட்டி னோடு வளைக்கையால் நெருக்கிப் புல்லித்
தணிவருங் காதல் விம்மக் காதலி தழுவ லோடும்
திணிஇருள் அறுக்குஞ் சோதித் திருவுருக் குழைந்து காட்டி
அணிவளைத் தழும்பி னோடு முலைச்சுவ டணிந்தார் ஐயர்.   380

     அழகிய கொங்கைச் சிகரத்தோடும் வளையை யணிந்த கைகளால்
இறுகத் தழுவி, வற்றாத காதல் பொங்கக் காதலியார் தழுவவும் செறிந்த
இருளைத் துரக்கும் சுடர் விடுஞ் சோதித் திருவுருவம் குழைந்து காட்டி
அழகிய வளையற்சுவடும் முலைச்சுவடும் ஐயர் பூண்டுகொண்டனர்.

கலி விருத்தம்

வற்றிநின் றருந்தவம் முயன்று பன்மறை
கற்றவர் உணர்வையுங் கடந்த பேரொளி
சிற்றிடைத் திருந்திழைத் தேவி வால்வளைப்
பொற்றழும் பொடுமுலைச் சுவடு பூண்டதே.       381

     பட்டினி விட்டு உடம்பு வாடிநின் றரிய தவத்தை முயன்று பல
கலைகளையும் கற்று அதனால் ஆய அறிவையும் கடந்த பேரொளிப்
பொருள் சிறிய இடையையும் திருந்திய அணிகளையும் உடைய
தேவியாருடைய வெள்வளையின் அழகிய வடுவொடும் முலைச் சுவடும்
அணியாகப் பூண்டு கொண்டதே!

உருஅரு அணுமலை உண்மை இன்மைமற்
றிருள்ஒளி யன்றிநின் றிலகு பேரொளி
மருமலர்க் கருங்குழல் மங்கை வால்வளைப்
பொருதழும் பொடுமுலைச் சுவடு பூண்டதே.       382

     உருவமும் அருவமும், அணுவும் மலையும், உண்மையும் இன்மையும்
இருளும் ஒளியும் ஆகிய இவையிற்றின் வேறுபட்டுநின்றுவிளங்கும் பேரொளி,
மணமுடைய மலரணிந்த கரிய கூந்தலையுடைய காமாட்சி அம்மையின்
வெள்ளிய வளைகளின் அழுந்து தழும்பொடு முலைச்சுவட்டினையும்
அணியாகப் பூண்டதே.

பெருவிரல் அளவையின் உளத்திற் பேணிநின்
றுருஉயிர் முழுவதும் ஆட்டும் ஒள்ளொளி
அருள்பொழி குறுநகை அணங்கு வால்வளைப்
புரிதழும் பொடுமுலைச் சுவடு பூண்டதே.         383

     ஆன்ம அறிவின்கண் விரும்பிப் பெருவிர லளவாக நின்று நின்று
உடம்புகளையும் உயிர்களையும் முற்றவும் தொழிற்படுத்தும் ஒளிக்குள்
ஒளி அருளைப் பொழிகின்ற புன் முறுவலையுடைய அம்மையாரின்
வெள்வளையாற் செய்த தழும்பொடு முலைச்சுவட்டினையும் பூண்டு
கொண்டதே.