690காஞ்சிப் புராணம்


உயிர்ப்பினை ஒடுக்கியே விழித்து றங்குவோர்
அயர்ச்சியில் அகக்கணால் நோக்கும் ஆரொளி
குயிற்பெடைச் சின்மொழி இறைவி கோல்வளைப்
புயத்தழும் பொடுமுலைச் சுவடு பூண்டதே.       384

     உச்சுவாசம் நிச்சுவாசங்களை ஒடுக்கியே சாக்கிரத்தே அதீதத்தைப்
புரிவோர் தளர்தல் இல்லாத உள்ளுணர்வால் நோக்கப்படும் அரிய ஒளி,
பெண்குயிலை ஒக்கும் இனிமை அமைந்த சிலவாகிய மொழியைப் பேசும்
இறைவியார் கைவளைத் தழும்போடு முலைச் சுவடும் பூண்டதே!

என்றும்ஓர் இயல்பினிற் பகல்இ ராஅற
நின்றவர் அன்பினுக் கணிய நீள்ஒளி
மென்றளிர்ச் சீரடி விமலை கைவளைக்
கொன்தழும் பொடுமுலைச் சுவடு கொண்டதே.    385

     சகல கேவலம் நீங்க என்றும் ஒரு தன்மையாய சுத்த நிலையில்
நின்றவர் தம் மெய்யன்பினுக்கு அவரினும் அணித்தாய பேரொளி மெல்லிய
தளிரை ஒக்கும் சிறிய அடிகளையுடைய மலமில்லாதவராகிய அம்மையாரின்
கைவளைகளின் பெருமை பொருந்திய தழும்பொடு முலைச்சுவடும் ஏற்றதே!

மனத்திடைத் தன தடி நினைந்த மாத்திரை
வினைப்பெரும் பிறவிவேர் அகழும் மெய்யொளி
அனைத்துல கீன்றருள் அமலை பல்வளை
இனத்தழும் பொடுமுலைச் சுவடும் ஏற்றதே.       386

     மனத்தின்கண் தன்னுடைய திருவடிகளை எண்ணிய அளவானே
வினையான்வரும் பெரியபிறவியை வேரொடும் அகழும் உண்மையொளி,
அனைத்துயிரையும் பயந்து அருள் செய்யும் விமலையாரின் பலவாகிய
வளைத்தழும்போடு முலைச்சுவடும் பூண்டதே!

வடவரை குழைத்ததோர் பவள மால்வரை
முடிவொடு முதலிலா மாவின் மூலத்து
மடநடை இளங்கொடி வளைக்க ரத்தொடு
குடமுலைக் கம்மவோ குழைந்து மெல்கிற்றே.      387

     மேருமலையை வில்லாக வளைத்த ஒப்பற்ற பவளப் பெருமலை
ஆதியும் அந்தமும் இல்லாத மாவினது அடியில் மெல்லிய நடையினை
யுடைய இளங்கொடியாள் வளைக்கரத்தினுக்கும் குடத்தை ஒக்கும் முலைக்கும்
குழைந்து இளகிற்று அம்மவோ!