தழுவக் குழைந்த படலம் 691


வானவர் யாவரும் வந்து போற்றுதல்

கலிநிலைத் துறை

அம்பொன் வால்வளைத் தழும்பொடு முலைச்சுவ டணிந்து
கம்ப வைப்புடை வாழ்க்கையார் கருணைகூர்ந் தருளி
நம்பும் ஓகையிற் பெருங்களி சிறத்தலும் நலமார்ந்
தும்பர் இம்பரின் உயிரெலாம் உவகையிற் களித்த.       388

     மிக் கழகிய வெள்ளிய வளைகளின் வடுவொடு முழுச்சுவட்டினையும்
அணிந்து திருவேகம்பத்தில் வீற்றிருப்பவர் கருணை மேலிட்டருளி விரும்பும்
உவகையால் விசேடப் பெருங்களிப் பெய்தலும் நலம் நிரம்பி விண்ணிலும்
மண்ணிலும் உள்ள பல்லுயிர்களும் மகிழ்ச்சியாற் களித்தன.

திக்கும் வானமு மாசறத் திகழ்ந்தொளி படைத்த
தக்க பல்லியம் எண்ணில தழங்கின இளங்கால்
புக்கு மெல்லெனப் புதுமணங் கொண்டெழுந் தசைந்த
இக்க டற்பெரும் புவியெலாம் அடங்கின துகள்கள்.    389

     எண்டிசைகளும் ஆகாயமும் குற்றமற விளங்கி, ஒளி பெற்றன. தக்க
வாச்சியங்கள் அளவில தாமே முழங்கின. தென்றற் காற்று மெத்தெனப்
புகுந்து புதிய மணத்தைக் கொண் டெழுந் தசைந்தது. கடல் சூழ்ந்த
இப்பெரும் பூமி முழுவதும் புழுதி அடங்கின.

மந்தி ரத்தழல் வலஞ்சுழித் தெழுந்தொளி திகழ்ந்த
சுந்த ரப்பொலம் பூமழை நிரந்தரஞ் சொரிந்த
சந்த மாமறை தனித்தனி மகிழ்ந்தெழுந் தார்ந்த
எந்த வையமும் மயலிடை இன்றிஓங் கினவால்.    390

     மந்திரத்தால் வளர்க்கும் வேள்வித்தீ மங்கலமாக வலஞ் சுழிந்து
ஓங்கி ஒளி விளங்கின. கற்பக மலர் மழை இடைவிடாமல் சொரிந்தன.
வண்ணமுடைய பெரு மறைகள் தனித்தனியே மகிழ்ந்து மிக் கொலித்தன.
எவ்வுலகமும் மயக்கம் நீங்கித் தெளிவால் உயர்ந்தன.

எங்கும் இன்னணம் நிகழ்வுழி இருமதக் கலுழித்
துங்க வெண்கரிக் கோமுதல் சுராசுரர் எல்லாம்
தங்க ளின்துணைக் கிழத்தியர் தம்மொடும் வல்லை
அங்க ணைந்தனர் அகம்நிறை உவகைமீக் கிளைப்ப.   391

     எவ்விடத்தும் இவ்வாறு நிகழுங்கால் பெரிய மத வெள்ளத்தையும்
புனிதத்தையும் உடைய வெள்ளானைக் கதிபதி யாகிய இந்திரன் முதலான
தேவரும் அசுரரும் யாவரும் தங்களுடைய வாழ்க்கைத் துணைவியருடன்
உள்ளம் நிறைந்த மகிழ்ச்சி பொங்கி யெழ விரைவில் திருவேகம்பத்தை வந்
தணுகினர்.