புண்ட ரீகமென் பொகுட்டணைக் கடவுளும் புதுப்பூந் தண்டு ழாய்முடித் தனிப்பெருந் தலைவனும் இருகேழ் முண்ட கத்துறை முதல்வியர் தமைஉடன் கொண்டு மண்டு பேரின்பங் கிடைத்ததின் றெமெக்கென வந்தார். 392 | தாமரைத் தவிசுடைய பிரமனும், திருமாலும் இருவகை நிறமுடைய வெண்டாமரை செந்தாமரை மலரி லுறையும் கலைமகளும் திருமகளுமாகிய தலைவியரையும் உடன் கொண்டு மிக்க பேரின்பம் இன்றெமக்கு வாய்த்ததென மதித்து வந்தனர். சோதி நாரதன் முதல்சுரர் முனிவரும் வசிட்ட னாதி யாயபல் பிரமநன் முனிவரும் அளவில் காதல் முந்துறு களிப்பொடுங் குழாங்கொடு கரத்தின் மீது தண்டமும் வேணியும் விளங்கவந் தடைந்தார். 393 | சுடரும்நாரதர் முதலானதெய்வமுனிவரரும், வசிட்டர் முதலான நற் பிரம முனிவரரும் அளவில்லாத காதல் முற்படு களிப்பொடு குழாங் குழாமாகக் கைத் தண்டொடும் சடைமுடியொடும் வந்தடைந்தனர். சத்தி மார்திதி அதிதிமற் றுறுதக்கன் மக்கள் ஒத்த யோகினிப் பகுதியர் அருந்ததி உலோபா முத்தி ரைத்திருந் திழைஅன சூயையே முதலாம் இத்தி றத்தவர் யாவரும் மகிழ்ந்துவந் திறுத்தார். 394 | திதி அதிதி என்னும் காசிப முனிவரர் துணைவியராகிய பத்தினிமாரும் மேலும் தக்கனுடைய செல்வியராகிய அசுவினி முதலானோரும் யோகினிக் குழாத்தோரும் அருந்ததி உலோபா முத்திரையாகிய திருந்திழையாரும், அனசூயை முதலாம் மங்கையரும் இவர் தம்மை யொப்பவரும் யாவரும் மகிழ்ந்து வந்து தங்கினர். சனக னாதியர் தமிழ்முனி தவத்துரு வாசன் முனிவர் சூழ்உப மன்னியன் முதுதிறற் பூதர் நனிஉ ருத்திரர் கணாதிபர் நந்திஎம் பெருமான் இனையர் யாவரும் ஆயிடை ஒருங்குவந் திறுத்தார் 395 | சனகாதியர் நால்வரும், அகத்தியரும், தவமுடைய துருவாசரும், முனிவர் சூழ தலைமையடைய உபமன்னியரும், பெருவலியுடைய பூதரும், பல் லுருத்திரரும், கணாதிபரும், நந்தி எம்பெருமானாரும் இத்திறத்தினர் யாவரும் வந்தனர். நண்ணி யாவரும் நாயகி தழுவிடக் குழைந்த அண்ண லார்திருக் கோலம்நேர் கண்டுகண் டார்த்தார் விண்ணி றைந்தபே ரானந்த வெள்ளத்தில் நிறைந்தார் கண்ணி னாற்பெறு பெரும்பயன் கைவரப் பெற்றார். 396 | |