யாவரும் நண்ணி அம்மையார் தழுவக் குழைந்த தலைவர்தம் திருக்கோலத்தைக் கண்ணெதிரே பல முறையும் கண்டு மகிழ்ச்சியால் ஆரவாரித்தனர். எங்கும் நிறைந்த பேரானந்தப் பெருங் கடலில் வியாப்பிய முற்றனர். கண்ணினால் பெறத்தக்க பேற்றினைக் கைக்கொண்டனர். அலர்ந்த வாள்விழி இன்பநீர் சொரியநின் றழுதார் மலர்ந்த காதலின் வடிவெலாம் புளங்கள் மலிந்தார் கலந்த சிந்தையார் அருட்பெருங் கருணையே நோக்கிப் புலந்த ழைத்திடச் சென்னிமேல் அஞ்சலி புனைந்தார். 397 | மலர்ந்த ஒளியுடைய விழிகள் ஆனந்த வெள்ளத்தைப் பொழிய நின்றழுதனர். விரிந்த காதலால் மேனி முழுவதும் புளகங்கள் மிக்கனர். புணர்ந்த உள்ளத்தராகிய அம்மை அப்பர் திருவருட் பெருங் கிருபையையே எண்ணி மெய்யறிவு மலர்ந்திடச் சிரமேல் கரங்குவித்தனர். ஆயி ரங்கதிர் ஆழியங் கடவுளும் அயனும் ஆயி ரம்விழி பெற்றிலேம் என்றழுங் கினர்கள் ஆயி ரம்விழி யுடன்முழு தாளியும் அமையா ஆயி ரங்கண்இவ் வற்புதம் காண்பதற் கென்றான். 398 | ஆயிரஞ் சூரியரை ஒக்கும் ஒளிவிடும் சக்கரத்தையுடைய திருமாலும் பிரமனும் காண ஆயிரங் கண்கள் பெற்றிலேமே என்று வருந்தினர். ஆயிரம் விழிகளை உடம்பிலே கொண்ட இந்திரனும் இந்த ஆயிரங்கண்கள் நிரம்பா இவ்வற்புதம் காண்பதற் கென் றரற்றினான். இன்ன தன்மையின் யாவரும் தொழுதெழுந் தாடி மன்னும் ஏழ்கடல் முழக்கெனப் பழிச்சினர் வாழ்ந்தார் அன்ன வர்க்கவண் நிகழ்ந்தபே ரானந்தம் இதழிச் சென்னி யாரன்றி மற்றெவர் தெளிதரற் பாலார். 399 | இவ்வியல்பில் யாவரும் தொழு தெழுந்தாடி ஏழ் கடலின் ஒலியென மருளப்பாடினர்; பரவினர்; வாழ்வு பெற்றனர்; அத்தன்மையர்க்கு உண்டாய பேரின்பத்தைக் கொன்றை மலர் மாலையை முடித்த பிரானாரன்றி மற்றி யாவரே உணர வல்லார். திருவேகம்பர் காட்சி கொடுத்தல் அந்த வேலையின் இறைவிதன் அணிவளைத் தழும்பு சந்த மென்முலைச் சுவடுதோய் தனியுருப் பொலியச் சுந்த ரந்திகழ் சுடரொளி இலிங்கத்தி னின்று முந்து தோன்றினார் மூவருக் கறிவரு முதல்வர். 400 | மூவர்க்கும் அறிவரிய தலைவர் அப்பொழுது அம்மையாருடைய அழகிய வளைத்தழும்பும் அழகிய மெல்லிய முலைச் சுவடும் தோய்ந்த ஒப்பற்ற வடிவம் விளங்க, அழகு பொலியும் சுடரொளிச் சிவ லிங்கத்தினின்றும் முற்பட்டுக் காட்சி தந்தனர். |