தோன்றி வாள்நிலாக் குறுநகை தோற்றிமீக் கடுக ஏன்ற வெள்ளநீர் சருவதீர்த் தப்பெயர் இசையான் மான்று மேதக நிறுவினார் மாதினைத் தழீஇக் கொண் டான்ற காதலால் செய்யவாய் முத்தம்உண் டளித்தார். 401 | வெளிப்பட்டுப் புன் முறுவல் நிலவரும்பக் காட்டிப்பெரிதும் விரைய மேவிய நீர்ப் பெருக்கினைச் சருவ தீர்த்தம் என்று புகழமைந்த பெயருடனே மூழ்கினோர் மேம்பாடெய்த நிலைபெறுவித்தவராகிய பெருமானார் உமையம்மையாரை இறுகத் தழுவிக்கொண்டு நிரம்பியகாதலால் செவ்விய முத்தம் உண்டு அருள் செய்தார். தோகை மஞ்ஞையஞ் சாயலாய் துளங்கிஉள் வெருவேல் ஓகை யுற்றனம் காண்டிநீ என்றுரைத் தருள வாகை ஏற்றினார் தம்மண வாளநற் கோலம் ஏக நாயகி நோக்கினாள் இணைவிழி களிப்ப. 402 | ‘தோகையை யுடைய மயில்போலுஞ் சாயலினை யுடையாய்! உள்ளம் கலங்கி அஞ்சாதேகொள். நின் பூசனைக்கு மகிழ்ச்சி எய்தினோம்’ கா ணென் றுரைத்தருள வென்றி விடையார் தம் திருமண வாளராய் விளங்கும் நல்ல கோலத்தை ஒப்பில்லாத தனி நாயகியார் இரு விழிகளும் களிப்புற நோக்கினார். தழீஇய கைகளை விடுத்தெழுந் தவனியில் தாழ்ந்து குழீஇய அன்பினால் அஞ்சலி சென்னிமேற் குவித்தாள் கழீஇய செம்மணி வடிவினைக் காண்தொறும் உலவாக் கெழீஇய காதலாற் கிளர்ந்தெழும் உவகையில் திளைத்தாள். 403 | தழுவிய கைகளை விடுவித்து எதிரெழுந்து பூமியில் வீழ்ந்து வணங்கி நின்று திரண்ட அன்பினால் சென்னிமேல் கரங்களைக் குவித்தனராய்ச் சாணை பிடித்த மாணிக்கத்தை ஒக்கும் திருமேனியை நோக்குந் தோறும் வற்றாது வளர்ந்த பொருந்திய காதலாலே பொங்கி எழும் மகிழ்ச்சியிற் படிந்தனர். அம்மையார் துதித்தல் அறுசீரடி யாசிரிய விருத்தம் நெடியவன் பிரமன் காணா நின்மலக் கொழுந்தே போற்றி அடியனேற் கபயம் நல்கும் அருட்பெருங் கடலே போற்றி படிமுதல் ஆறா றாகி வேறுமாம் பரனே போற்றி கடிமலர்த் தனிமா நீழற் கடவுளே போற்றி போற்றி. 404 | ‘திருமாலும் பிரமனும் அறியாத மலமின்றிமுளைத்த கொழுந்தே போற்றி. வெள்ளங் கொண்டு வெருவினேற்கு பயங்கெடுத்தருளும் பேரருட் கடலே போற்றி, மண் முதலிய முப்பத்தாறு தத்துவங்களுமாய் அவற்றின் வேறுமாய் உடனுமாய் நிற்கும் மேலோனே போற்றி. மணமுடைய மலர்களைக்கொண்ட ஒப்பற்ற மாவினது நிழலில் வீற்றிருக்கும் கடவுளே போற்றி போற்றி. |