தழுவக் குழைந்த படலம் 695


பெறலரும் பெரும்பே றின்று பெற்றனன் அடியேன் போற்றி
முறைமுறை உலக மெல்லாம் முகிழ்த்தளித் தழிப்பாய் போற்றி
அறைகழல் கறங்க மன்றில் ஐந்தொழில் நடித்தாய் போற்றி
நிறைமலர்த் தனிமா நீழல் நித்தனே போற்றி போற்றி.   405

     ‘பெறற்கரிய பெரிய செல்வத்தை இன்று அடியேன் பெற்றேன் போற்றி.
தொடர்ந்து உலகங்கள் அனைத்தையும் படைத்துக் காத்து அழிப்பவனே
போற்றி. ஒலிக்கின்ற வீரக்கழல் ஒலிக்கத் திருவம்பலத்தில் ஐந்தொழில்
புரியும் திருக்கூத்துடையாய் போற்றி, நிறைந்த மலர்களையுடைய தனிமா
நீழலில் எழுந்தருளியுள்ள சத்தியனே போற்றிபோற்றி,

தரைபுனல் இரவி இந்து தழல்உயிர் வளிவான் என்றா
உரைபெறு வடிவோர் எட்டும் உடையனே போற்றி போற்றி
வரையெழும் பரிதி செந்தீ மதிஅமை விழியாய் போற்றி
விரைமலர்த் தனிமா நீழல் வித்தகா போற்றி போற்றி.    406

     ‘நிலம் நீர், நெருப்பு, காற்று, வானம், சூரியன், சந்திரன், ஆன்மா
எனப் பேசப் பெறும் எட்டினையும் ஒப்பற்ற திருமேனியாக உடையவனே
போற்றி போற்றி. உதயகிரியில் எழும் சூரியன், செந்தீ, சந்திரன்
இம்மூன்றினையும் அமைந்த விழியாக வுடையோனே போற்றி போற்றி.
மணமுடைய மலர்களைக் கொண்ட தனிமா நீழலில் வீற்றிருக்கும் சதுரனே
போற்றி போற்றி!’

கறைமணி மிடற்றாய் போற்றி கண்ணினுள் மணியே போற்றி
மறவியின் வழிபட் டோர்க்கும் வழங்குபே ரருளாய் போற்றி
நிறைபரஞ் சுடரே போற்றி நெஞ்சக விளக்கே போற்றி
மறைமுதல் தனிமா நீழல் வள்ளலே போற்றி போற்றி.   407

     ‘நீல மணியை ஒக்கும் கழுத்தினனே போற்றி. கண்ணினுள் மணிபோல்
வாய் போற்றி. அபுத்தி பூர்வமாக வழிபாடு செய்தோர்க்கும் வழங்கு
பேரருளுடையோனே போற்றி. நிறைந்த சிறந்த சுடரே போற்றி.
நெஞ்சிடங்கொள் விளக்கே போற்றி. வேத மூலமாகிய தனிமா நிழலில்
வீற்றிருக்கும் வள்ளலே போற்றி போற்றி.’

முன்னுறு பொருள்கட் கெல்லாம் முற்படு பழையாய் போற்றி
பின்னுறு பொருள்கட் கெல்லாம் பிற்படு புதியாய் போற்றி
புன்மதி யாளர் தேறாப் பூரண முதலே போற்றி
சின்மயத் திருவே கம்ப சிவசிவ போற்றி போற்றி.       408

     ‘காலத்தால் முற்பட்ட பொருள்கள் எவற்றினுக்கும் முற்பட்ட
பழையோனே போற்றி. புத்தம் புதிய பொருள்கள் அனைத்தினுக்கும் பிற்பட்ட
புதியோனே போற்றி. அற்ப அறிவினர் நெளியாத எங்கும் நிறைவுடைய
முதலே போற்றி. மெய்யறிவு மயமான திருவேகம்ப போற்றி. சிவசிவ போற்றி
போற்றி,’