இத்தகு நீஉலகம் யாவையும் உய்யுமுறை அத்தனி மந்தரமேல் யாம்அரு ளாற்றின்நிலைஇப் பொய்த்திற னில்கழுவாய் இன்று புரிந்தனையாற் கொத்தலர் மென்குழலாய் வேட்டது கூறுகென. 413 | ‘இவ்வியல்புடைய நீ! உலகுயிர்கள் கடைத்தேறும்படி சிறந்த மந்தர மலைக்கண் யாம் ஏவிய வழியில் நின்று மெய்யே வன்மையுடைய கழுவாயாகும் பூசனையை இந்நாள் புரிந்தனை ஆகலின், கொத்துக்கள் மலர்தற் கிடனாகிய மெல்லிய கூந்தலாய்! நீ விரும்பிய வரங்களைக் கூறுக’ என, வன்றனி மால்விடையாய் மந்தரம் வண்கயிலை வென்ற வினைச்சிவலோ கத்தினும் மேதகவுற் றென்றும் நமக்கினிதாம் இந்நகர் ஆதலின்இங் கொன்றுநர் யாவர்களும் முத்தி யுறப்பணியாய். 414 | ‘மிகவும் ஒப்பற்ற பெரிய விடையை யுடையீர்! மந்தர மலை, வளமுடைய திருக்கயிலை, வினையை இகந்த சிவலோகம் என்னும் இம்மூன்றினும் சிறப்பெய்தி நமக்கு எந்நாளும் மகிழ்ச்சியை விளைவிக்கும் இடம் இக்காஞ்சி ஆகலின் இவ்விடத்தே பொருந்தி வாழ்வோர் யாவரும் முத்தியை அடையுமாறு அருள் செய்வீராக.’ மறந்தும் அறம்பிறழாக் காஞ்சி வளம்பதியின் அறிந்துசெய் தீவினையும் அன்றி எழுந்தனவும் பிறிந்து தவப்பயன்ஒன் றெண்ணில வாய்ப்பெருகி அறம்பொருள் இன்பமெலாம் ஆகவும்நீ அருளாய். 415 | ‘வாழ்வோர் மறந்தும் அறத்தின் வழியை விட்டகலாத காஞ்சியம்பதியின்கண் ஒரோவழிப் புத்தி பூர்வமாகச் செய்த தீவினையேயாக அபுத்தி பூர்வமாகச் செய்த தீவினையே ஆக அவை பந்தியாது நீங்கி, அறிந்தோ அறியாமலோ செய்த நல்வினைப்பயன் ஒன்று அளவிலவாய்த் தழைத்து அறம், பொருள் இன்பம் யாவும்வாய்க்கவும் நீவிர் அருளுதிர்.’ இங்கிவை வேண்டும்எனக் கெம்பெரு மானெனமீப் பொங்கு பெருங்கருணைப் பூரணி வேண்டுதலும் சங்கணி வெண்குழையார் தந்திரு வுள்ளமகிழ்ந் தங்கலுழ் மேனியினாய் கேள்இது வென்றருள்வார். 416 | ‘எமது பெருமானே! இவ்வரங்கள் எனக்கு இவ்விடத்தே வேண்டு’ மென்று மேன்மேலெழும் பெருங்கருணையை யுடைய பூரணி (எங்கும் நிறைந்தவள்) வேண்டுங் காலைச் சங்கை வெண் குழையாக அணிந்தவர் தமது திருவுள்ள மகிழ்ந்து ‘அழகொழுகும் வடிவுடையோய்! இதனைக் கேள்’ என்று வாய் மலர்வார். 88 |