698காஞ்சிப் புராணம்


எண்சீரடி யாசிரிய விருத்தம்

     எய்சிலை நீள்புருவத் தேந்திள மென்முலையாய் எம்மிடை
எம்அடியார் தம்மிடை எய்தலுறச், செய்பிழை யன்றிவருந் தீவினை
ஏனையெலாம் சீர்வளர் காஞ்சியினில் தேய்ந்து தவம்பெருகி,
மெய்திகழ் நாற்பயனும் மேவ நிறீஇயினமால் வேறும் உனக்கினிஎன்
வேண்டுவ தென்றிடலும், மொய்யொளி மேனியினாள் முன்தொழு
தேத்திஇள மூரல் முகத்தலரப் பேசுத லுற்றனளால்.             417

     ‘அம்பு எய்ய நின்ற வில்லை ஒக்கும் நீண்ட புருவத்தினையும் நிமிர்ந்த
கொங்கையையும் உடையாய்! எமக்கும் எம் அடியவர்க்கும் சேருமாறு
செய்யப்படும் குற்றங்களின் விளைவாகிய தீவினை தவிரப் பிற பாவங்கள்
காஞ்சியில் வசித்தலால் தேய்ந்து தவம் வளர்ந்து உறுதி விளங்கும் அறம்,
பொருள், இன்பம், வீடாகிய நாற்பயனும் பொருந்துமாறு அமைத்தோம்.
மேலும், இனி உனக்கு வேண்டுவது யாது?’ என வினவலும், செறிந்த
ஒளியுடைத் திருமேனியையுடைய அம்மையார் முன் தொழுது வணங்கிப்
புன் முறுவல் பூப்பப் பேசுவர்,

அறுசீரடி யாசிரிய விருத்தம்

     முதுகுடுமிப் பொலங்குவட்டு மந்திரத்தின் முன்னர்எனைக் காளீ
என்று, புதுமையுற விளித்தனையால் அதுகேட்ட துண்டிலை போல்
இருந்தேன் அந்நாள், இதுபொழுதும் இவ்வாறே விளித்தருளிச்
செய்தாய்மற் றிதனை மாற்றி, விதுவணியுஞ் சடையானே கவுரநிறம்
பெறவேண்டும் அருளாய் என்றாள்.                        418

     ‘உயர்ந்த உச்சியையுடைய பொன்மயமான மந்தரமலையில்
முன்னோர்கால் அடியேனைக் ‘காளீ’ என்று வியப்புறுமாறு அழைத்தனை.
அதனைக் கேளாமை போல இருந்து விட்டேன் அக்காலத்தில். இப்பொழுதும்
இவ்வாறே கறுப்பி என்ற பொருளில் அழைத்தருளினை. இந்நிறத்தை நீக்கிப்
பிறையை அணிந்த பெருமானே பொன்னிறத்தைப் பெறவேண்டும் அருள்
செய்வாய்’ என்று வேண்டினர்.

     ஆண்டகையார் அதுகேளாக் குறுமூரல் முகத்தரும்ப அருளிச்
செய்வார், மாண்டவலித் தயித்தியரால் அலைப்புண்ட திவ்வுலகம்
வாழ்வான் எண்ணி, ஈண்டும்உனை அவ்வாறு விளித்தேம் இக்
கருங்கோசம் இன்னே மாற்றி, வேண்டியவா கவுரநிறம் பெறுதிநீ
விண்டிடும் அக் கோசந் தன்னில்.                          419

     ஆளும் இயல்பினர் அதனைக் கேட்டுக் குறுநகையுடன் அருள்வர்.
‘மிக்க வலியுடைய அசுரரால் அலைக்கப்படுகின்றதாகிய இவ்வுலகம்
வாழும்பொருட்டு இப்பொழுதும் உன்னை அங்ஙனம் அழைத்தேம், இக்கரிய
உடற்சட்டையை இப்பொழுதே நீக்கி விரும்பியவாறு பொன்னிறத்தைப்
பெறுதி நீ. சுழன்றிடும் அக்கரிய சட்டையில்,