தழுவக் குழைந்த படலம் 699


     கூற்றம்உறழ் சும்பனையும் நிசும்பனையுங் கொலைசெய்யக்
குறுகார் உட்கத், தோற்றுதிறற் கவுசிகியாந் துர்க்கைஇனித்
தோன்றும்இதோ காண்டி என்றார், சோற்றொடியும் அக்கணமே
வரியரவின் மூதுரிபோற் காளமேனி, மாற்றினாள் மணிக்கவுர
உருப்பெற்றாள் காதலரை வணங்கிச் சொல்வாள்.              420

     ‘யமனொடு மாறுபடுகின்ற சும்பனையும் நிசும்பனையும் கொலை
செய்யப் பகைவர் அஞ்சத் தோற்றுகின்ற வலியுடைய கவுசிகி என்னும்
துர்க்கை இப்பொழுது தோன்றுவள். இங்கே காண்’ என்றனர்.
கோற்றொடியாரும் அக்கணமே வரிகளையுடைய பாம்பினது. பழைய தோல்
கழலுமாறு போலக் கரிய திருமேனியை மாற்றினார். அழகிய கவுர நிற வடிவு
பெற்றனராய் நாயகரை வணங்கிக் கூறுவார்.

     நாதனே நின்னருளால் இப்பொழுதே நவைக்காள வடிவம்
மாற்றிக், காதல்புரி கவுரியென வயங்குற்றேன் ஆதலின்இக் காஞ்சி
மாடே, மாதரொடு வானவர்தங் குழாம்நெருங்கப் பனிவரையின்
நிகழ்ந்த வண்ணம், மேதகைய கடிமன்றல் எமக்கிந்நாள் உண்டாக
விழைகின் றேனால்.                                     421

     ‘நாயகரே! நும் அருளினால் இப்பொழுதே குற்றமுடைய கரிய
வடிவத்தை மாற்றிக் காதலைச் செய்விக்கும் கவுரியாக விளங்குகின்றேன்.
ஆகலான், இக்காஞ்சியின்கண் மகளிரும் தேவரும் கூடி நெருங்க இமய
மலையில் நிகழ்ந்தாங்குச் சிறப்புடைய திருமண மங்கலம் அடியேற்கு
இந்நாள் நிகழ விரும்புகின்றேன்.’

     உருத்திரர்கள் கணநாதர் பலவேறு கடவுளர்கள் உவண
ஊர்தி, மருத்தமல ரணைப்புத்தேள் ஐந்தவித்த மாதவர்மற் றுள்ளோர்
யாரும், கருத்துவகை யுறத்தத்தம் பன்னிகளோ டிங்கெம்மைக் கண்ணிற்
காணும், அருத்தியினால் ஒருங்கணைந்தார் அண்ணலே அருளென்று
பின்னும் வேண்டும்.                                     422

     உருத்திரர்களும், கணநாதர்களும், பல்வகையராகிய தேவர்களும்,,
கருடவாகனராகிய மாலும், பிரமனும், ஐம்பொறிகளை அடக்கிய முனிவரரும்,
பிறரும் மகிழ்ச்சி மிகத் தம் வாழ்க்கைத் துணைவியரோடு இங்கு எம்மைக்
கண்ணாற் காணும் பெரு விருப்பினால் ஒன்றுபடக் குழுமி வந்தனர்.
ஆகலின், அண்ணலே! அருள் செய்’ என்று பின்னரும் வேண்டுவர்.

     இவ்வதுவை கவுரிதிருக் கலியாணம் என்றுலகின் வழங்க
வேண்டும், செவ்வியுற ஐயாட்டைக் கன்னியென யான்ஈங்குச் சிறந்த
வாற்றாற், பௌவநீர் அகல்வரைப்பிற் பைப்பாந்தள் மணிஅல்குற்
பணைத்தோள் மாதர், எவ்வெவரும் ஐயாண்டிற் கன்னியர்கள்
கவுரியரென் றாதல் வேண்டும்.                            423