70காஞ்சிப் புராணம்


அணங்கனார் பரப்பி விற்கும் அணிகிளர் கோங்கந் தாரிற்
சுணங்கினைக் கணியென் றஞ்சிச் சுரும்பினம் உறாமை நோக்கிப்
பணங்கிளர் பாந்தள் அல்குற் பாவைமீர் என்னே பொற்பூ
மணங்கமழ் கின்ற தென்பார் ஆடவர் மருட்சி எய்தி.     60

     கோங்கரும்பை ஒத்த குவி முலைமேல் தேமல் படர்ந்த மகளிர்
பூவிற்போர். காமுகர் பூக்கொள்வோர். தூக்கிப் பிடித்த கோங்குமலர்
மாலையின் இடையே தோன்றும் தேமலை வேங்கைப் பூவென மதித்து
வண்டினம் அஞ்சி மொய்த்தில; வண்டுகள் மொய்யாமை பற்றிப்
பொன்னாலாகிய பூவென மதித்து மணங்கமழ்வது என்னே என மருள்வர்
அவ்வாடவர். அச்சம், மருட்சி இவை உண்மையுணரத் தடையாவன.

வீழ்பொருள் எடுக்க லாற்றா உறுசனம் மிடைந்த வீதித்
தாழ்குழல் மடவார் மைந்தர் தங்களுள் முட்டுங் காலைக்
காழ்மணி முலையுந் தோளுங் கலந்துற உவகை பொங்கி
வாழ்நருஞ் சிலரே பல்லோர் வாடிநைந் தழுங்கு வார்கள்.   61

     வீழ்ந்த பொருளை எடுக்க இயலாத அளவில் மிகுமக்கள் செறிந்த
வீதியில் மகளிருமைந்தரும் ஒதுக்குப் பெறாது முட்டுங்காலை வருந்துவோர்
பலர்; முகமும் அகமும் மலர்வோர் சிலர்.

     ஒழுக்கம் உடையோர் பலராகவும், தப்பினோர் சிலராகவும் காட்டினர்.
உறு-மிகுதி. ‘அவைதாம், உறுதவ நனியென வரூஉ மூன்றும், மிகுதி செய்யும்
பொருள என்ப’ (தொல். சொல். 299)

கலிநிலைத் துறை

நெருங்கு பல்சனம் முழக்கறாக் கூலம்நீல் விடத்தைக்
கரந்த கம்பர்மேல் தெழித்துறுங் கடல்பெருந் தெருவால்
சுரந்து வந்துநாற் புறத்தினுஞ் சனமிகத் தொகுவ
பரந்த வீரையுள் புகுந்திடும் பற்பல நதியே.     62

     நெருங்கிய பல மக்கட்குழாத்தின் முழக்கம் நீங்காத கடைத்தெரு
கரிய விடத்தைக் கண்டத்தில் ஒளித்த திருவேகம்பர்மேல் உரப்பி (அதட்டி)
எழுந்த கடலை ஒக்கும். பெரிய தெருக்களின் வழியாகப் பெருகி வந்து
நாற்புறத்தினும் மக்கள் பெருகக் கூடுதல் பரந்த அக்கடலுள் புகுந்திடும்
பலப்பல நதிகளை ஒக்கும்.

     கூலம் எண்வகை; அவை நெல், புல், வரகு, தினை, சாமை, சோளம்,
மலைநெல், மூங்கில் நெல் என்பன.

மற்றைய வீதி

அறத்தின் நீள்நகர் புவனசக் கரமென ஆன்ற
திறத்த பொன்மதில் ஏழுடைச் சின்மயக் கோயில்
புறத்த வான்மிசைப் புலவர்கண் ணூறுபட் டிடாமை
மறைத்தெ னக்குயின் உரிஞ்சுபூம் பந்தர்சால் மறுகு.    63