701


     அவ்வண்ணம் பெறலரிய பெருவரங்கள் அளித்தருளி அகிலம்
ஈன்ற, மைவண்ணக் கருங்கூந்தல் மனக்கருத்து முற்றநெடு மலய
வாழ்க்கை, மெய்வண்ணக் குறுமுனிவன் தவப்பேறு நிரம் பவிய
னுலகம் வாழச், செவ்வண்ணப் பெருமானார் மணவினையில்
திருவுள்ளம் பற்றி னாரால்.                              427

     அங்ஙனம் பெறற்கு அரிய பெரிய வரங்களை வழங்கியருளிப்
பல்லுலகையும் ஈன்ற மைநிறமுடைய கரிய கூந்தலாராகிய அம்மையார்
கருத்து நிரம்பவும், அகத்தியர் தவப்பயன் நிரம்பவும் பல்லுயிர்களும்
வாழவும் செவ்வண்ணமுடைய பிரானார் திருமண நிகழ்ச்சியில் திருவுள்ளம்
செலுத்தினார்.

தழுவக்குழைந்த படலம் முற்றிற்று.

அகத்திருவிருத்தம்-2449

திருமணப் படலம்

அறுசீரடி யாசிரிய விருத்தம்

     விண்டாழ் மாவின் முளைத்தெழுந்த விமல னார்தந் திருமேனி,
தண்டா அன்பின் உமையம்மை தழுவக் குழைந்த வாறுரைத்தாம்,
மண்டா ணவத்தின் தருக்கிரித்து மாறா இன்பப் பெருவாழ்வு, கண்டார்
கதுவ அருள்கொழிக்குங் கவுரி மணத்தின் திறம்புகல்வாம்.        1

     தேவரும் வணங்கும் மாவடியில் வீற்றிருந்தருளும் இயல்பாகப்
பாசங்களின் நீங்கியவர் தமது திருமேனியை, நிலைபெற்ற அன்பொடும்
ஏலவார்குழலியம்மையார் தழுவிய வாற்றான் குழைந்த வரலாற்றைக்
கூறினோம். செறிந்துள்ள ஆணவத்தின் வலிமையைக் கெடுத்து நிலைபெற்ற
பேரின்ப வாழ்வினைத் தரிசித்தோர் அடையுமாறு திருவருளைச் செய்யும்
காமாட்சி யம்மையாரது திருமணத்தின் சிறப்பினை விரும்பிக் கூறுவோம்.

இறைவன் கட்டளைப்படி திருமால் பணிசெயல்

திருவே கம்பத் தமர்ந்தருளுந் தேவர் பிரானார் புடைநின்ற
மருவார் துளபத் தொடைமவுலி மாயோன் றன்னை எதிர்நோக்கிக்
கருவார் கூந்தல் தடங்காமக் கண்ணி தனக்கும் மற்றெமக்கும்
பெருவாய் மையினாற் கடிவிழாத் திருநாள் பிறங்கப் புரிகென்றார். 2