திருவேகம்பத்தில்வீற்றிருக்கும் தேவதேவர், ஒருபுறத்தொதுங்கி நின்ற மணங்கமழும் துளபமாலையைத் திருமுடியிற் சூடிய திருமாலை அருள்கூர்ந்து நோக்கிக் ‘கருமையும் நீட்சியும் அமைந்த கூந்தலும் பெரியகண்களும் உடைய காமாட்சிக்கும் எமக்கும் விதிப்படி யாகத் திருமணவிழா சிறக்கச் செய்க’ என்றருளினர். பல்லார் நிற்பத் தனைநோக்கிப் பணித்த கருணைத் திறம்போற்றிப், புல்லார் வெருவுந் தனித்திகிரிப் புத்தேள் ஓகை தலைசிறப்பச், சொல்லாற் றெழுகி மணஎழுச்சித் தொழிலின் மூண்டு வேண்டுவன எல்லாப் பொருளுங் கடிதீங்குக் கொணர்கென் றிமையோர் தமைவிடுத்தான். 3 பல்லோரும் ஏவலை எதிர்நோக்கி இருப்பத் தம்மை ஏவிய அப்பேரருளுக்குப் போற்றுதல் புரிந்து பகைவர் அஞ்சுதற்கு ஏதுவாகிய ஒப்பற்ற சக்கரத்தை ஏந்திய திருமால் உவகை மீதூர ஆணையில் நின்று திருமண வினையில் கருத்து முற்றி அதற்கு வேண்டும் பொருள்கள் யாவும் விரைவாக இங்குக் கொண்டு வருவீராமின்’ எனத் தேவரைத் தூண்டினர். தொடியார் தழும்பிற் பெருந்தகைக்குந் தோகை தனக்குங் கலியாணம், கடிமா நகரம் முழுதறியக் கறங்கு முரசம் அறைவித்துக், கொடிநீள் மாட மாளிகைசூழ் கடிமண்டபமுன் கோடிப்ப, நெடுமால் விசும்பின் யவனரைக்கூய்ப் பணித்தான் அவரும் நிருமித்தார். 4 வளைத் தழும்பைப் பூண்ட பெருந்தகையார்க்கும் மயில் போல் வார்க்கும் நிகழாநிற்கும் திருமணத்தைக் காவலும், மங்கலமும் அமைந்த கச்சி மாநகரிலுள்ளார் யாவரும் அறியு மாறு பறை அறைவித்து நீண்ட கொடிகளையுடைய மாடமாளிகைகள் சூழ்ந்த திருமண மண்டபத்தை அலங்கரிக்குமாறு தேவதச்சரைக் கூவி ஏவினர் அந்நிலையே அவரும் சிருட்டித்தனர். திருமண மண்டபப் புனைவு கலி விருத்தம் அகனிலம் பசும்பொனின் அமைத்தொ ராயிரப் பகலொளி மழுங்குசெம் பவளத் தூண்நிறீஇ உகும்ஒளி மரகதப் போதி உம்பர்வைத் திகலற வயிரஉத் திரமும் ஏய்வித்தார். 5 | அகன்ற தரையைப் பசிய பொன்னினால் நியமித்துப் பின்னர் ஓராயிரஞ் சூரியர் தம் ஒளி மழுங்கு மளவு ஒளியுடைய செவ்விய பவளத் தூணங்களை நிறுவி ஒளியை உமிழ்கின்ற போதி (கை) வைத்து அவற்றின் மேலே குற்ற மற்ற வயிரத்தாலாய உத்திரங்களை ஏற்றினர். |