திருமணப் படலம் 703


உருக்கிய செழும்பொனின் மணிகள் ஒன்பதும்
நெருக்குறப் பரப்பிஓ வியம்நி கழ்த்திய
திருக்கிளர் பலகைமேல் இணக்கித் தெள்ளொளி
பெருக்கும்வெண் பளிங்கினாற் பித்தி யாக்கினார்.    6

     உருக்கிய நற் பொன்னிடத்தே நவமணிகளும் செறியக் குயிற்றி
ஓவியப் பாவைகளாக்கிய அழகுவிளங்குகின்ற பலகைகளை உத்திரங்களிற்
பொருத்தித் தெளிந்த ஒளியை விரிக்கும் வெள்ளிய படிகக் கற்களாற்
சுவர்களை எடுத்தனர்.

மேனிலை மாளிகை வேதி சூளிகை
ஏனவும் பலபல இயற்றி மேவர
வானெழும் இருசுடர் மணிக ளாதியால்
ஊனமில் சிகரமும் உம்பர்ச் சூட்டினார்.            7

     மேற்றளங்களும், மாளிகைகளும், மேடைகளும், உச்சிமாடங்களும்,
பிறவும் மிகப்பலவாக வகுத்து விருப்பெழச் சூரியகாந்தக்கல், சந்திரகாந்தக்கல்
ஆகிய இவற்றினால் குற்றமில்லாத சிகரங்களும் மேலிடத்தே அமைத்தனர்.

காவியங் கண்ணியர் விழையுங் காமுகர்
ஆவியுஞ் சிந்தையும் அழிய ஏக்கற
ஓவியத் தொகையெலாம் உம்பர் மாதர்போற்
பாவியல் பாடலிற் பயிலச் செய்தனர்              8

     நீலோற்பல மலரை ஒக்கும் கண்களையுடைய மகளிரை விரும்பும்
காமுகருடைய உயிரும் மனமும் அழியவும், ஆசையால் தாழவும் தேவமகளிர்
பாடலிற் பயிலும் நிலையில் ஓவியங்களை அமைத்தனர்.

வரையினின் றிழிதரு மாலை வெள்ளநீர்
அருவியென் றயிர்ப்புற அலங்கு நித்திலக்
குருமணி வடம்ஒளி கொழிக்குஞ் சுற்றெலாம்
நிரைநிரை யாத்துமண் நீவ நாற்றினார்.            9

     மலையினின்றும் இழியும் இயல்பினையுடைய வெள்ளப் பெருக்காகிய
அருவியே என்று ஐயத்துள் ஒருதலையே துணிய அசைகின்ற நிறமுடைய
முத்த மாலைகளைச் சுற்றுப்புறங்களிலெல்லாம் வரிசை வரிசை யாகத் தூக்கித்
தரையில் புரளத் தொடங்க விட்டனர்.

மணிவடக் கிடையிடை மறுவில் கண்ணடி
தணிவற ஒளிவிடுந் தவளச் சாமரை
பிணிமலர்த் தொத்துவண் பிரசப் பல்கனி
அணிபெறு முறைமையின் அலங்கத் தூக்கினார்.    10