குண்டமும் வேதியும் கோல மார்தரு மண்டில வகைமையும் மற்றும் ஏர்பெற விண்டவர் புரம்அடும் விமலர் நூன்முறை அண்டரும் முனிவரும் அயிர்ப்பச் செய்தனர். 15 | தேவரும், முனிவரும் வியக்கும்படி சிவாகம விதிவழி வேள்விக் குழிகளும், மேடைகளும், அழகு அமைந்த மண்டல விதங்களும் வகுத்தனர். கொங்குயிர் சந்தனக் குறடு காழகில் குங்குமம் கருப்புரம் குரவம் மான்மதம் வெங்கடி கமழ்தரப் புகைத்து மேதக எங்கணும் ஐயவி சிதறி ஏர்செய்தார். 16 | வாசனையை வீசுகின்ற சந்தனக் கட்டையும், வயிரமுடைய அகிற்கட்டையும், குங்குமப் பூவும், பச்சைக் கருப்புரமும், கோட்டமும், கத்தூரியும் ஆகிய இவற்றை விருப்பம் உண்டாம்படி வாசனை வீசப் புகையை உண்டாக்கி மேன்மை பெற எவ்விடத்தும் வெண்சிறு கடுகைத் தூவி அழகுபடுத்தினர். தெய்வங்களுக்கு இனிதாதல் பற்றி வெண் சிறு கடுகு தூவுதல் சங்க இலக்கியங்களுட் காண்க. பாங்கெலாம் பனிமலர்ப் பந்தர் கட்பொறி வாங்கிய எழில்பெற வகுத்து மாமணம் வீங்கிய நானநீர் துவற்றி நித்திலம் ஆங்கவா லுகமென அகம்ப ரப்பினார். 17 | பக்கங்களிலெல்லாம் குளிர்ச்சியுடைய பூம்பந்தரைக் கண்ணிந் திரியம் பிறிதொன்றைக் காணாதவாறு தன் கண்ணே கிடக்க அழகுற அமைத்துப் பெருமணம் தேங்கிய பனி நீரைத் தெளித்து மணல்போல முத்துக்களைப் பரப்பினர். பந்தரின் புடையெலாம் பங்க யப்புனல் அந்தரர் ஆட்டயர் அலங்கற் பொய்கையும் சந்தனங் கற்பகந் தருக்கள் மல்கிய சுந்தரப் பொழில்களுந் துவன்றச் செய்தனர். 18 | பந்தரின் மருங்கெல்லாம் தாமரை மலர்களைக் கொண்ட விண்ணோர் விளையாட் டயர அலைகளால் அலைகின்ற நீர் நிலைகளையும், சந்தனம், கற்பக முதலிய தேவ மரங்கள் பல்கிய அழகிய பொழில்களையும் செறிய நியமித்தனர். 89 |