706காஞ்சிப் புராணம்


மேற்படி வேறு

யவனர் தந்தொழில் இத்திற மாகமற்
கவுரி மன்ற லெனக்கறங் கும்பணைச்
சிவம்ம லிந்த செழுங்குரல் கேட்டலும்
உவகை பூத்தனர் ஒள்நகர் மாக்களே.             19

     தேவதச்சர் தமது செய்கை இவ்வாறாகக் கவுரியம்மையாரின் திருமணம்
என்னும் மங்கலம் மிகுந்த செழுவிய திருவார்த்தையைப் பறை அறைவித்துக்
கூறக் கேட்ட அளவே ஒள்ளிய நகர மக்கள் மகிழ்ச்சி பூத்தனர்.

நகரணி நலம்

இயங்கு மாந்தர் நெருக்கினில் இற்றுவீழ்
தயங்கு காழ்களும் தாரும் புலவியின்
முயங்கு மாதர் உகுத்தவும் மொய்த்தொளி
வயங்கு வீதியிற் குப்பைகள் மாற்றுவார்.          20

     நடக்கின்ற மக்களின் நெருக்கத்தில் அற்றுவீழ்ந்த அசைகின்ற
மணிவடங்களும், பூமாலைகளும், ஊடற் காலத்தில் உணங்குகின்ற மகளிர்
சிதறியவும் செறிந்தொளி விளங்குகின்ற வீதிகளிற் குப்பைகளாகப் போக்கித்
தூய்மை செய்வார்.

சந்தம் மல்கு தமனியச் சுண்ணமுஞ்
சுந்த ரக்கருப் பூரத் துகள்களும்
கந்த நீரிற் கரைத்து மறுகெலாம்
பந்தின் ஊட்டிப் பனிப்பர்க ளென்பவே.          21

     அழகு மிகுகின்ற பொற் பொடிகளையும், அழகிய கருப்புரப்
பொடிகளையும் வாசனை வீசுகின்ற பனிநீரிற் கரைத்து விதிகளிலெ்லாம்
மட்டத்துருத்தியால் குளிரச் செய்வர்.

வண்டு லாமலர் வார்மணிப் பந்தரும்
விண்டு ழாவு பதாகையும் வில்மணி
கொண்ட தோரணக் கூட்டமும் யாணரிற்
பண்டை யுள்ளன பாற்றி இயற்றுவார்            22

     வண்டுகள் உலாவுகின்ற நீண்ட அழகிய மலர்ப்பந்தர்களும், வானில்
அசைகின்ற கொடிகளும், ஒளியுடைய மணிகள் பதித்த மகர தோரணங்களும்
ஆகிய இவற்றை முன்னைய என நீக்கிப் புதுமையாகக் கோடிப்பர்.