| 		| தாமம் நாற்றித் தமனிய வேதியிற் பூமென் நீர்நிறை பூரண கும்பமும்
 காமர் பாலிகை யுங்கதிர்த் தீபமும்
 தூம முந்தொகுப் பார்இடந் தோறுமே.           	23
 |       மாலைகளை அளவாக அறுத்துத் தொங்கவிட்டுப் பொற்றிண்ணைகளிற்     பூக்கள் நிரம்பிய நீர் நிறைந்த நிறைகுடங்களும், அழகிய முளைப்
 பாலிகைகளும், சுடரையுடைய விளக்குகளும், புகைகளும் இடங்கள் தோறும்
 நிரப்புவர்.
 		| நித்தி லத்தினை நீற்றுபு வேதியிற் சித்தி ரித்துச் செழும்பொனின் மாளிகைப்
 பித்தி ஓவியம் பெட்பப் புதுக்குவார்
 பத்தி மாடம் பழுதொழித் தாக்குவார்.            24
 |       முத்துப்பொடியால் மேடைகளிற் கோலமிட்டு மாளிகைகளிற் செழும்    பொன்னாலாகிய சுவர்களிற் கண்டோர் விரும்பும்படி புதிதாக்குவர்.
 வரிசையாக அமைந்த மனைகளிற் பழையனபோக்கிப் புதிதாக எடுப்பர்.
 		| இருக வுள்துளை ஈர்ங்கலு ழிக்கடக் கரிகள் பண்ணுவர் கால்விசைத் தோடுவாம்
 பரிகள் பண்ணுவர் பார்குழி ஆழியின்
 இரதம் பண்ணுவர் எங்கணும் எண்ணிலார்.        25
 |       இரண்டு கன்னத் துளைகளினின்றும் ஒழுகுகின்ற மத நீர்ப்    பெருக்கினையுடைய யானைகளை அலங்காரம் செய்வர். கால் வாங்கி
 விரைந்தோடுகின்றதாகவும், குதிரைகளை அலங்கரிப்பர். பூமியைக்
 கிழித்தோடுகின்ற சக்கரங்களையுடைய தேர்களை ஒப்பனை; செய்வர்.
 இங்ஙனம் யாண்டும் ஒப்பனை செய்வோர் அளப்பிலராவர்.
 		| நீண்ட பொன்னிலைத் தேர்கள் நிறுத்துவார் மாண்ட தூண்தொறும் வாருறை சேர்த்துவார்
 ஈண்டு வார்கட் கிடம்பல ஆக்குவார்
 வேண்டி யார்க்கு விருந்து திருத்துவார்.          	26
 |       பொன்னின் வேலைப்பாடமைந்த தேர்களைக்கொண்டு வந்து     நிறுத்துவார். மாட்சிமையுடைய தூண்களுக்கெல்லாம் நீண்ட உறைகளைப்
 போர்ப்பர். வரும் விருந்தினர்கட்கிடமுண்டாகப் பொருள்களைத் தொகுப்பர்.
 விரும்பி வந்தோர்க்கும் விருந்தமைப்பர்.
 |