அறுசீரடி யாசிரிய விருத்தம் கச்சி மாநகர் முழுவதும் இன்னணங் கவின்பயில் சிறப்போங்க, முச்ச கத்தவர் குழாங்கொடு வயின்தொறும் நிறைந்திட முடிவானோர், இச்சை யாற்றினின் மணவினைக் குரியவை எங்கணுங் கொணர்ந்தீண்டப், பொச்ச மில்பெரு மங்கலத் துழனியிற் பொலிவுறும் அதுகாலை. 27 காஞ்சி மாநகரம் முழுவதும் இவ்வாறு அழகு வதியும் சிறப்பு மேலும் உயரவும், மூவுலகிலுள்ளோரும் பெருங் கூட்டமாய்த் திரண்டு யாண்டும் நிறைந்திடவும், முடிகளை அணிந்துள்ள தேவர் தத்தம் விருப்பின்படி திருமணத்திற்கு வேண்டும் உபகரணங்களை எவ்விடத்தும் தொகுப்பவும், மெய்ம்மையுடைய பெரிய மங்கல ஓசையினாற் பொலிவெய்தும் அது பொழுதில். திருமால் திருவிழா வியற்றல் கம்ப நாயகன் திருவருள் பெற்றுவெண் கதிர்வளைக் கரத்தோன்றல், அம்புயத்தவன் முனிவரர் தம்மொடு அணிபேறு நன்னாளால், செம்பொன் மாமணிப் பாலிகை முளைவித்திச் சினவிடைக் கொடியேற்றி, எம்பி ரான்மலை மாதுடன் உலாத்தருந் திருவிழா எழுவித்தான். 28 வெள்ளொளி தவழும் வலம்புரியைத் தாங்கியுள்ள திருமால் திருவேகம்பர்தம் திருவருளைப் பெற்றுப் பிரமனும், முனிவரரும் சூழும் சிறப்பு மிகும் நல்ல நாளில் பொன்னும் மணியும் கொண் டியற்றிய பாத்திரங்களில் பாலிகை முளைகளை விதைத்து இடபக்கொடி ஏற்றி எமது பிரானார் மலைமகளாருடன் எழுந்தருளுந் திருவிழாக் கொள்ளத் தொடங்கினார். ஒன்ப திற்றுநாள் விழாவணி நிகழ்ந்தபின் உற்றஈ ரைந்தாம் நாள், இன்பம் மீக்கொளப் பங்குனி உத்திரத் திமையவர் குழாத்தோடு, மன்ப தைத்திரள் மகிழ்ந்தெழுந் தார்ப்புற மணவினைக் கவின் கொள்வான், என்ப ணிப்பிரான் மஞ்சனச் சாலையின் இனிதெழுந் தருளுற்றான். 29 ஒன்பது நாட்கள் திருவிழா நிகழ்ந்த பின்னர்ப்பத்தாம் நாளாகிய பங்குனி உத்திரத்தன்று தேவரும், மக்களும், முனிவரரும் பிறவும் இன்பம் மேம்படவும், மகிழ்ச்சி தோன்றி ஆரவாரிக்கவும் திருமணக் கோலம் கொள்ளும் பொருட்டு எலும்பை அணியாகவுடைய பெருமானார் திருமஞ்சனச்சாலையின்கண் இனிதாக எழுந்தருளினர். |