இறைவன் மணக்கோலங் கொள்ளல் மேற்படி வேறு திருத்துயில் அகலப் புத்தேள் செய்தவப் பேறு வாய்த்து மருத்தபூங் கடுக்கை வேணிப் பரஞ்சுடர் வடிவந் தீண்டிப் பெருத்தபொற் குடத்துத் தெண்ணிர் மஞ்சனம் பிறவும் ஆட்டி அருத்திகூர் அன்பின் நுண்ணூல் அறுவைஒற் றாடை சாத்தி. 30 | திருமகள் தங்குதற்கிடனாகிய மார்பினையுடைய திருமால் தாம் செய்த தவப்பயன் வாய்த்தமையால், மணங்கமழும் கொன்றை மாலையைத் தரித்த சடைமுடிப்பெருமானார் திருவுருவினைத் தீண்டப் பொன்னாலாகிய குடத்தினால் தெள்ளிய நீரைத் திருமுழுக்காட்டி ஏனைய வற்றினானும் முழுக்குவித்துப் பேரன்பு மிகுகின்ற அன்பினால் நுண்ணிய நூலால் அமைந்த ஒற்றாடை கொண்டு ஈரம் புலர்த்தி. கற்பகம் அளிப்ப வாய்ந்த கைபுனைந் தியற்றல் செல்லா ஏற்படு நுழைநூற் பட்டின் இலங்கஉள் ளாடை சாத்தி அற்பக இமைக்குஞ் செம்பொன் ஆடைமற் றதன்மேற் காமர் விற்படு புருவ மாதர் விழியிணை கவரச் சாத்தி. 31 | ஒருவர் கையாற் சிறப்பித்துப் பிறப்பியாத தோற்றத்தால் கற்பகமரம் தோற்றுவிக்கப் பெற்ற ஒளிவீசும் மெல்லிய இழையானும் பட்டினானும் ஆகிய உள்ளுடையைப் புனைந்து அதற்கு மேலே இருளைப் போக்கிச் சுடர்விடும் பீதாம்பரத்தை அழகிய வில்லையொக்கும் புருவம் கூடிய மகளிர் விழித்துணைகளைக் கவர்ந்து கொள்ளும்படி சாத்தி, தனிவிரைப் பனிநீர் வாக்கித் தேய்த்தசந் தனப்பூஞ் சேறு நனிமணம் பயில்கற் பூரங் குங்குமம் நறுங்கத் தூரி இனியமான் மதமே மற்றும் மட்டித்த கலவை எண்டோள் கனிமொழி பாகன் மேனி கமழ்தர மெழுகிக் கீறி. 32 | நறுமணங்கொண்ட பன்னீர் விட்டு உரைத்த சந்தனக் குழம்பும், பச்சைக் கருப்பூரமும், குங்குமப்பூவும், கத்தூரியும், சவ்வாதும் சேர்த்துக் குழைத்திருக்கும் கலவைச் சந்தனத்தையும் எட்டுத்தோள் களையும் கனியை ஒக்கும் மொழியினையுடைய அம்மையைப்பாகத்தும் கொண்ட பெருமானார் திருமேனியில் மணம் கமழப் பூசிக் கீறுதல் செய்து, சுடர்த்திரு மேரு வெற்பிற் சூன்றனர் நுண்ணி தாகப் பொடித்தபொற் சுண்ணந் தெய்வப் பூந்தரு மலரின் வாங்குங் கடித்திரட் சுண்ணத் தாதிற் கலந்துமேல் அட்டி வாசம் மடுத்தெழுந் தூமம் ஈரம் வறலுமா றன்பின் ஏற்றி. 33 | |