வானுலகத்திலுள்ள தேவர்கள் தம் கண்ணேறு படாமல் மறைத்தாற் போல மேகங்கள் தவழ்கின்ற பூம்பந்தர்கள் அமைந்த வீதிகள், அறத்தான் மிக்க கச்சித் திருநகரில் நிலவட்டம் என அமைந்த கூறு பாட்டினவாய் பொன்மயமான மதில் ஏழுடைய ஞானமயமாகிய கோயிலின் புறத்தில் உள்ளன. அருள்நிலைத் தானங்கள் ஆதலின் சின்மயம் என்றனர். ‘ஆலயந்தானும் அரனெனத் தொழுமே’ எனவும், ‘சிவாலயத்தையும் பரமேசுரனெனக் கண்டு வழிபடுக, எனவும் அருளிய திருவாக்குக்களை எண்ணுக. மகரப் பொற்குழைப் பிரான்தளி சூழ்மதில் குறடும் நகரச் சீரெயில் சுற்றும்மா ளிகைநிரை ஆருந் திகழச் சூழ்தெரு ஆரிடை வெளியுமாய்ச் சிவன்தேர்ச் சகடத் தேருடைச் சகடமற் றொன்றெனத் தயங்கும். 64 | மகரகுண்டலம் தரித்த திருவேகம்பப் பெருமான் திருக்கோயிலைச் சூழ்ந்த மதில் குடமாகவும், நகரைச் சூழ்ந்த மதில் வட்டையாகவும், மாடவரிசைகள் ஆர்க்கால்களாகவும், விளங்கச் சூழ்ந்துள்ள தெருக்கள் ஆர்க் கால்களின் இடைஇடையே அமைந்த வெளியிடங்களாகவும் கொண்ட சக்கரமாய்ச் சிவபிரான் மேற்கொண்ட நிலவுலகமாகிய தேர்க்குச் சக்கரங்களுள் ஒன்றாகிய சூரியன், தனது தேர்க்குச் சக்கரம் பிறிது ஒன்றென விளங்கா நிற்கும். சூரியன் தேர்க்குச் சக்கரம் ஒன்றெனப் பேசும் நூல்கள். சரிக்குங் குஞ்சர மதப்பெருங் கலுழியுந் தளவைச் சிரிக்கும் மூரலார் களைந்ததார் நறவமுஞ் சேறாய் விரிக்கும் வீதியில் அடிவழுக் காவகை வெயிலைப் புரிக்குஞ் செம்மணி பதித்துமேல் நடப்பராற் புரியோர். 65 | சஞ்சரிக்கும் களிறுகளினுடைய மதநீர்ப் பெருக்கின் குழம்பும் முல்லையரும்பைப் பரிகசிக்கின்ற பற்களையுடைய மகளிர் சூடிக் களைந்த, மாலைகளினின்றும் சிந்தும் தேனும் கலந்து சேறாய்ப் பரந்த வீதியில் கால் வழுக்காதபடி நகரமக்கள் ஒளியைத் தோற்றுவிக்கின்ற மாணிக்கங்களை அச்சேற்றிற் பதித்து அவற்றின்மேல் நடப்பார்கள். ஞெள்ளற் பாங்கரின் நறியநீர் வண்டலாட் டயரும் அள்ளற் சேறுகள் புலர்த்துவான் இடையிடை அகழ்ந்து பள்ளத் தாற்சிறு கால்பல வகுத்தெனப் பிறங்கும் வள்ளற் காவலர் செலுத்துதேர்ச் சகடுபோம் வழியே. 66 | வீதிகளின் மருங்கில் நறுமணங் கமழும் நீர் விளையாட்டைச் செய்யு மிடங்களில் குழம்பிய சேற்று நிலத்திடை வள்ளன்மையுடைய அரசர்கள் செலுத்துகின்ற தேருருளைகள் போம் வழிகள் மிகு வீழ்தலின், சேறு உலரும்பொருட்டு, ஆங்காங்குச் சிறுசிறுகால்கள் பள்ளங்களொடு வகுத்தாற்போல விளங்கும். |