திருமணப் படலம் 711


மாதர்வண் குழையுந் தோடும் வார்ந்திரு புயத்தும் நீவக்
காதிடை அணிந்து செம்பொற் கதிர்மணிப் பட்டம் நெற்றி
மீதுற விசித்துத் தெய்வ விற்குலா மணியின் மோலி
போதமல் வேணிச் சென்னி பொலிதரக் கவித்தான் மன்னோ.  37

     அழகிய வளவிய குழையையும், தோட்டினையும், நீண்ட இரு
தோள்களிலும் தடவுமாறு காதுகளில் அணிந்து, நெற்றியில் செம்பொன்னாற்
செய்யப் பெற்ற மணிப்பட்டத்தைச் சூட்டித் தெய்வ ஒளிநிலவும்
மணிகளிழைத்த முடியை மலர்கள் செறிந்த சடைமுடிமேற் பொலிவுண்டாகச்
சூட்டினர்.

திருவணி அணிந்து போற்றிச் சிவபிரான் எழுந்து கும்பம்
இருகயல் கவரி தோட்டி இலங்குகண் ணடிப தாகை
முரசொளி விளக்கி னோடு முன்னிவிண் மகளிர் போற்றப்
பரிமணி மண்ட பத்திற் புகுந்துபூந் தவிசின் ஏறி.        38

     அணிகலங்களை அணிந்து பரவச், சிவபெருமானார் எழுந்து பூரண
கும்பம், இருகயல், வெண்சாமரை, அங்குசம், கண்ணாடி, வெற்றிக் கொடி,
முரசு, திருவிளக்காகிய அட்டமங்கலங்களுடன் தேவமகளிர், எதிர் வந்து
துதிசெய்ய மணிமண்டபத்திற்புக்குப் பூவணைமேல் எழுந்தருளி,

உருத்திரர் முதலோர் தத்தம் ஒண்டவி சிருக்கு மாறு
திருத்தகு கடைக்கண் நோக்கஞ் செய்துவீற் றிருந்த பின்னர்
விருத்துவண் டமிழ்தப் பாடல் விளரியாழ் முரன்று சேக்கும்
மருத்துழாய்ப் படலைத் தண்தார் வயங்கிய மருமப்புத்தேள்.   39

     உருத்திரர் முதலானோர் தத்தமக்குரிய சிறந்த ஆசனத்தில் இருக்கும்
படி தெய்வத்தன்மை விளங்குகின்ற கடைக்கண் நோக்கம் அருளி
வீற்றிருந்தகாலை, புதிதாக வண்டுகள் அமிழ்தமனைய பாடலை விளரிப்
பண் யாழ்போன்று ஒலித்துத் தங்கும் மணமுடைய துளபமாலை ஆகிய
தண்ணியதார் புரளுகின்ற மார்பினையுடைய திருமால்,

அம்மையார் மணக்கோலங்கொள்ளல்

மனைக்குரி மரபின் வாச மலர்மகள் வதனம் நோக்கிக்
கனைக்கும்வண் டுழக்கும் மென்பூங் கருங்குழற் கவுரி மாதா
தனைக்கலன் திருந்தப் பூட்டித் தம்மென் உரைத்த லோடுஞ்
சுனைக்கரு நீலக்கண்ணாள் பெருங்களி துளும்பச் சென்றாள்.  40

     மனைக்குரிய முறைமையினையுடைய தாமரை மலரிலுறையும் திருமகள்
முகத்தை நோக்கி, ஒலிக்கும் வண்டுகள் மிதித்துழக்கும் மெல்லிய மலர்களைச்
சூடிய கரிய கூந்தலையுடைய கவுரியாகிய அன்னையை அணிகலன் அழகுறப்
பூட்டி அழைத்து வருக எனக் கூறிய அளவிலே சுனையில் தோற்றிய நீல
மலரை ஒக்கும் கண்ணினள் பெருமகிழ்ச்சி ததும்பச் சென்றாள்.