| 		| உவளக வரைப்பின் எல்லா உபகர ணமுங்கொண் டுற்றுப் பவளநீள் பலகை மீது பகிரண்டம் முழுதும் ஈன்றுந்
 துவளிடைக் கன்னி யாகித் தூநலங் கனிந்த காம
 ரவளைநன் கிருவிக் கூந்தல் அவிழ்த்துநெய் அள்ளிச் சாத்தி.  41
 |       அந்தப் புரத்தில் வேண்டும் எல்லாப் பொருள்களையும் கொண்டு     சென்று பவழத்தாலியன்ற நீண்ட பலகைமிசை அனைத்துலகையும் பயந்தும்
 துவளுகின்ற இடையையுடைய கன்னியாகத் தூய அழகு முதிர்ந்த
 விருப்புடைய அம்மையை நன்கிருத்திக் கூந்தலை அவிழ்த்து நெய்யை
 முகந்து பூசி,
 		| நெல்லிநுண் விழுது மஞ்சள் விழுதுமெய் நிரம்பப் பூசி மல்குபே ரன்பு கூர வாசமுந் துவரும் மற்றும்
 நல்லவை நயப்பச் சேர்த்தி நறுவிரைத் தூநீ ராட்டி
 எல்லுமிழ் குழையாள் மேனி ஈர்ம்புனல் வறல ஒற்றி.    42
 |       நுண்ணிதின் தேய்த்த நெல்லிக் குழம்பும், மஞ்சட் குழம்பும் மெய்யில்     நிறையப் பூசி மிக்க பேரன்பு மேன்மேல் மிக வாசனைப் பண்டங்களும்
 துவருடைப் பொருள்களும், பிறவுமாம் நல்லனவற்றை விரும்பப் பூசி நறிய
 மணங்கமழும் தூய நீரைத் திருமுழுக்காட்டி ஒளியை எறிக்கின்ற
 காதணியுடைய அம்மையாரின் திருமேனி ஈரத்தை வற்றுமாறு ஒற்றி,
 		| நனைமுறுக் கவிழ்பூங் கற்பம் நல்குபட் டாடை சாத்திப் புனைமணித் தவிசின் ஏற்றிப் பொருந்தலர் வெருவச் சீறு
 முனைமதக் களிநல் யானை மூரிவெண் கோட்டிற் செய்த
 தனைநிகர் சீப்புக் கொண்டு தாழ்குழல் ஒழுங்க நீவி.      43
 |       அரும்புகள் மலர்கின்ற கற்பக விருட்சம் நல்கிய பட்டாடையை    உடுத்தி, அழகிய மணியாசனத்தில் இருத்திப் பகைவர் அஞ்சுமாறு சீறும்
 வெறுக்கின்ற மதத்தால் களிப்புடைய சிறந்த களிற்றினது பெரிய வெள்ளிய
 தந்தச் சீப்பினால் நீண்ட கூந்தலை ஒழுங்குபடச்சீவி.
 		| வம்பவிழ் நானம் பூசி மான்மதம் அகில்சந் தாதி பம்புறப் புகைத்த தூமம் பரிமளங் கமழ ஊட்டி
 அம்பொன்வாய் மகரந் தாழ மண்ணுறுத் தளிந்த பெண்ணைப்
 பைம்பழ மென்ன முச்சி பசும்பொன்வார் நாணிற் சேர்த்தி.   44
 |       மணம் கமழும் மயிர்ச் சாந்து பூசிக் கத்தூரி, அகில், சந்தனம்    முதலியவற்றைச் செறியப் புகையாக்கிய புகையை மணம் கமழக் கூந்தற்கு
 ஊட்டி அழகிய பொன்னா லியன்ற மகரமீனினது வாய் வடிவாகச்
 செய்யப்பட்ட அணிகலத்தைத் தங்கப் பண்ணிப் பனையினது கனிந்த கரிய
 பழத்தை ஒப்ப உச்சிக் கொண்டையை முடித்து அதனைப் பசிய பொன்னாற்
 செய்த நீண்ட கயிற்றால் கட்டி,
 |