நகுசுடர் முத்த மாலைக் கொத்துநான் றெருத்தின் நீவித் திகழொளி விரிப்ப அங்கேழ் முச்சியிற் செருகி வாச முகையவிழ் அலங்கல் சூழ்ந்து மொய்கதிர் ஈகை மாலை தொகுமணி மாலை கூந்தற் பரப்பினிற் சுடரப் போக்கி. 45 | சுடர்விடு முத்துமாலைக் கொத்துத் தொங்கிப் பிடரில் வருடி ஒளியைப் பரப்புமாறு நிறமுடைய கொண்டையிற் செருகி மணம் விரியும் அரும்புகள் அலர்கின்ற மாலையைச் சூழவைத்துப் பொன்னரி மாலையையும் கூந்தலில் சுடர் விடுமாறு ஒழுங்குறுத்தி, ஒழுகொளி பரப்புந் தெய்வ உத்தியும் மயிலும் மிக்க அழகுற வனைந்து நாப்பண் ஐதுறு கீற்றின் வெய்யோன் மழகதிர் கிடந்த தென்ன வயங்குகுங் குமத்தூள் அட்டிப் பொழிகதிர் மாசைப் பட்டம் பொலியவா ணுதலில் வீக்கி. 46 | பாய்கின்ற ஒளியைப் பரப்பும் சீதேவி என்னும் தலைக்கோலத்தையும், மயில் வடிவையும் பேரழகு தோன்ற முடித்து நடுவே அழகாக அமைந்த கீற்றாகச் சூரியனின் இளங்கதிர் கிடத்தலைப்போலத் திகழும் குங்குமத்தினைச் சேர்த்து ஒளியைச் சொரியும் பொன்னாலியன்ற பட்டம் பொலியுமாறு ஒளியுடைய நுதலிற்கட்டி, சிந்துரஞ் சேறு செய்த திருந்தெழில் திலகம் இட்டுக் கந்தமென் குவளை நோக்கின் அஞ்சனங் கவினத் தீட்டிக் கொந்தொளி முகத்தின் நாசித் திருவணி கொளுவிக் காதின் அந்தழல் மணியின் தோடும் அவிர்கதிர்க் குழையுஞ் சாத்தி. 47 | செம்பொடியைக் குழம்பாக்கிய மிக்க அழகுதரும் பொட்டிட்டு மணமுடைய மெல்லிய நீலமலரை ஒக்கும் கண்களின் மை அழகுபடத் தீட்டிய மொய்யொளியுடைய திருவணியாகிய மூக்குத்தியை மூக்கிற் சேர்த்திக் காதில் நெருப்பனைய அழகிய மாணிக்கத் தோட்டினையும் குழையையும் சாத்தி, விலகிவில் லுமிழுங் கட்டு வடத்தினை மிடற்றிற் சூழ்ந்து நிலவுமிழ் மணியிற் செய்த அங்கதம் நெடுந்தோள் சாத்தி இலகொளி வாய்ந்த முன்கைக் கடகமுந் தொடியும் ஏற்றி அலர்கதிர் மோதி ரங்கள் வார்விரல் அமையக் கோத்து. 48 | குறுக்கிட்டு ஒளியை உமிழும் மணிகள் கோத்தமைந்த வடத்தினைக் கழுத்திற் சுற்றி மணிபதித்த தோளணியை நெடியதோளிற் சாத்தி, முன்கையில் கடகத்தையும் தொடியையும் செறித்து விரிந்த கதிரையுடைய மோதிரங்களை நீண்ட விரலில் பொருந்தக் கோத்து, |