மிகக்கடி கமழ்ந்த சாந்தால் வெரிந்புறம் மெழுகிக் கையின் நகத்தினால் எழுதிச் சால நறுவிரைக் களபச் சேறு முகைத்தனம் புதையக் கொட்டி முருகுயிர் பூந்தா தப்பிப் புகைத்துஞ்சாந் தாற்றி கொண்டு வீசியும் புலர்த்திப் பின்னர். 49 | மிக்க மணம் கமழும் சந்தனத்தை முதுகில் மட்டித்து நகத்தினால் அதன்கண் கீற்றுகளை உண்டாக்கி மிக்க மணமுடைய கலவைக் குழம்பை அரும்பை ஒக்கும் முலை மறைய அப்பி மணம் விரிக்கும் மகரந்தப் பொடியை அதன்மேல் அப்பித் தூபமும், சிவிறியும் கொண்டு ஈரத்தை வற்றச் செய்து பின்னர், நித்தில மாலை துப்பு நிரைத்தபூந் தொடைமா ணிக்கக் கொத்துறு தாமம் பச்சைக் கோப்பமை தெரியல் வேரித் தொத்தலர்ப் பிணையல் செம்பொற் சுடர்விரி தொடலை ஏனைத் தத்தொளி நீலக் கோதை தண்கதிர் எரிப்பச் சாத்தி. 50 | முத்துமாலையும், பவழத்தைக் கோவைப்படுத்த பொலிவுடைய மாலையும், மாணிக்கமாலையும், மரகதக் கோவையால் அமைந்த மாலையும், தேன்பொருந்திய கொத்துக்கள் அலர்ந்த மாலையும், பொன்னரிமாலையும், ஒளிதவழ் நீலமாலையும் ஆகிய இவற்றைத் தண்ணியகதிர் வீசச்சாத்தி, எரிச்சிகை எழுவ தென்ன இளங்கதிர் விரிக்கும் பைவாய் அரிச்சிகை மணிக ளாதி அழகுறக் கோத்த காழின் விரிச்சிகை காலபங் காஞ்சி மேகலை பருமம் ஐந்துங் கரிச்சிகை மத்த கத்துக் கடிதடம் புலம்பச் சாத்தி. 51 | தீயின்கொழுந்து எழுவதொப்ப மழகதிர் ஒளிரும் படமுடைய நாகரத்தினம் முதலியவற்றால் அழகுபடக் கோத்த முப்பத்திரண்டு, பதினாறு, எட்டு, ஏழு, பதினெட்டுக் கோவைமணிகளால் ஆயமுறையே விரிசிகை, கலாபம், காஞ்சி, மேகலை, பருமம் எனப் பெயரிய ஐந்தனையும் யானையினது தலையிடத்து மத்தகம் போன்ற நிதம்பத்தில் ஒலியெழச் சாத்தி, அலம்புகிண் கிணிமின் காலும் அவிர்பரி யாகஞ் செம்பொற் சிலம்புபா டகம்என் றின்ன புறவடி திகழச் சாத்தி நலம்புனை செய்ய பஞ்சின் நறுங்குழம் பலர்ந்த கஞ்சம் இலம்படச் சிவந்த தாளின் ஊட்டினள் இறைஞ்சி நின்றாள். 52 | ஒலிக்கின்ற கிண்கிணி, மின் னுமிழும் விளங்கு பரியகம், பொற்சிலம்பு, பாடகம் என்பன அடிக்கண் விளங்க அணிந்து, தாமரையினது அலர்ந்த மலர் புற்கென்னச் சிவந்த திருவடிகளில் செம்பஞ்சுக்குழம்பினை ஊட்டிப் பணி முற்றுப்பெற்றமையின் வணங்கி நின்றனள். |