716காஞ்சிப் புராணம்


     பரப்பிய நடைப்பாவாடைமேல் மெத்தென மெத்தென நடந்து
பேரலங்காரம் செய்யப் பெற்ற திருமணம் நிகழும் கல்யாணமண்டபத்தின்கண்
மலராலமைந்த தவிசின்மேல் வீற்றிருக்கின்ற புனிதனார் மருங்கில் சித்திரக்
கொழுந்தென விளங்கி இருந்தனர்.

திருமணம்

அறுசீரடி யாசிரிய விருத்தம்

திருத்தகும் அணைமேல் அண்ணல் அணங்குடன் திகழ நோக்கி
உருத்திரர் முதலோர் யாருந் தொழுதெழுந் துவகை பூத்தார்
மருத்துழாய் அலங்கல் மார்பன் மலரடி விளக்கப் புக்கான்
பெருத்தபல் அண்டம் ஒன்றாய்ப் பிளந்தென இயங்கள் ஆர்த்த  58

     தெய்வத்தவிசில் அண்ணலார் அம்மையொடும் வீற்றிருப்ப
அக்கோலத்தைக் கண்டு உருத்திரர் முதலோர் யாவரும் வணங்கி
உயர்ந்துவகையிற் பொலிந்தனர். மணங்கமழும் துழாய் மாலையர் பாத
பூசனை செய்ய முற்பட்டனர். அப்பொழுது பேரண்டங்கள் பலவும் ஒரே
காலத்தில் வெடித்தாற் போலப் பல்லியங்களும் முழங்கின.

பொலம்புனை கரகத் தீம்பால் பூமகள் வணங்கி வார்ப்ப
வலம்புரிக் கரத்தோன் ஐயன் மலரடி விளக்கிப் போற்றி
இலங்கொளிப் பட்டால் ஈரம் மெல்லெனப் புலர்த்தி ஏந்தும்
அலங்கொளிப் பாத தீர்த்தம் பருகினான் ஆர்வங் கூர      59

     திருமகள் இறைஞ்சிப் பொற்பாத்திரத்தினின்றும் இனியபாலை வாக்கத்
திருமால் தலைவர்தம் திருவடிகளைத் தூய்மை செய்து துதி செய்து
விளங்குகின்ற ஒளியுடைய பட்டாடையால் மெத்தென ஒற்றி ஈரத்தைப்
போக்கிச் சேமித்த மிக்கொளியுடைய பாததீர்த்தத்தை ஆர்வம்
மிகப்பருகினார்.

கன்னல்நெய் கனிபால் இன்ன கமழ்மதுப் பருக்கம் நல்கி
என்னை ஆளுடைய கோமான் ஏடவிழ் கமலச் செங்கை
தன்மிசை உலகம் ஈன்ற தனிமுதற் பிராட்டி யான
கன்னிகை வைத்து நீர்பெய் தளித்தனன் கமலக் கண்ணன்.   60

     கருப்பஞ்சாறு, நெய், பழச்சாறு, பால் என்று இவை மணக்கும் மது
பருக்கம் நல்கி என்னையும் அடிமையாக உடைய தலைவராகிய
சிவபிரானார்தம் இதழ்விரிந்த தாமரைமலரை ஒக்கும் செவ்விய திருக்கை
மேல் உலகம் அனைத்தையும் ஈன்ற தனிமுதன்மையை யுடைய
பெருமாட்டியாரான கன்னியார் தம் திருக்கையை வைத்து நீர்பெய்து
கொடுத்தனர் பதுமாக்கன் எனப்படும் திருமால்.

     ‘பாணிக் கிரகணம்’, ‘தாராதத்தம்’, என்பன காண்க.