திருமணப் படலம் 717


கலி விருத்தம்

ஆர்த்தன பணிலங்கள் ஆர்த்த துந்துமி
ஆர்த்தன பல்லியம் ஆர்த்த மங்கலம்
ஆர்த்தன நான்மறை ஆர்த்த ஆகமம்
ஆர்த்தன பல்கலை ஆர்த்த வாழ்த்தொலி.        61

     ஆர்த்தன சங்கங்கள்; ஆர்த்தன துந்துமிகள்; ஆர்த்தன பலவகை
இயங்கள்; ஆர்த்தன மங்கலப் பாடல்கள்; நான்கு மறைகளும். ஆர்த்தன
ஆகமங்கள்; ஆர்த்தன பல் புராணங்களும் பிறவும். ஆர்த்தன
பல்லாண்டுகளும் வாழ்த்துரைகளும்.

பொழிந்தனர் வானவர் கற்பப் பூமழை
வழிந்தன பாடலின் மதுரத் தேமழை
இழிந்தன அடியவர் இணைக்க ணீர்மழை
அழிந்தன வினையெலாம் அனைய காலையின்      62

     தேவர் கற்பகப் பூமழையைச் சொரிந்தனர். இசைப் பாடல்களின் சுவை
மிக்க இனிய கீதம் வடிந்து வழிந்தன. அடியவர்தம் இருகண்களும் நீர்
அருவியாக இழிந்தன. வினைத் துன்பங்கள் யாவும் அக்காலை அழிந்தன.

பங்கயக் கிழவனைப் பகர்ந்த நூல்முறை
செங்கனல் வளர்ப்ப அங் கருளிச் சேவுடை
அங்கணன் மலைமகள் மிடற்றில் ஆரருள்
மங்கல நாணினை வயங்கச் சாத்தினான்.         63

     நூல்களின் விதித்த முறையால் பிரமனை வேள்வி செய்யத்
திருவாணையிட்டு அது செய்கையில் எரிமுன்னர் விடையை ஊர்தியாக
வுடைய அங்கணர் உமையம்மையார் திருக்கழுத்தில் அருள் வடிவாகிய
திருமங்கலக் கயிற்றினை வயங்கச் சாத்தினர்.

முண்டகக் கடவுளும் முதல்வன் ஆணைஉட்
கொண்டுவே தாகமக் குறிவ ழாவகை
மண்டிய கொழுங்கனல் வளர்த்து வாசநெய்
மொண்டுதூய்க் கடிவினை முற்றச் செய்தனன்.     64

     தாமரையோனும் முதல்வர்தம் கட்டளையை மனத்திற் கொண்டு
நூல்களில் விதித்தபடி செறிந்த வளவிய தீயை ஓம்பி மணமுடைய நெய்யை
முகந்து பெய்து திருமணச் செயலை முற்றுவித்தனர்.

மாண்டசெந் தமிழ்முனி மனக்க ருத்தொடு
காண்டகு கவுரிதன் கருத்து முற்றின
வேண்டிய வேண்டியாங் களிக்கும் மெய்யருள்
ஆண்டகை விளக்கினான் போலும் அற்றைநாள்.   65