வீதி வாய்த்திரு விழாவணி தொழுதிடப் போந்த பேதில் பேரிளம் பெண்முடி வாயபல் பருவ மாதர் யாவரும் நாணொடு வளைகலை தோற்றுக் காதல் வேள்சிலைப் பூங்கணை மாரியிற் குளிப்ப. 74 | திருமணக்கோலத்தைத் தொழுதிட வீதியிற் போந்த பேதை முதலாக மாறுபாடில்லாத பேரிளம் பெண் ஈறாக எண்ணப்படும் எழுவகைப்பருவ மகளிர் யாவரும் உடன் பிறந்த நாணத்தையும், வளையையும், மேகலை முதலானவற்றையும் இழந்து காதலையூட்டும் மன்மதன் கரும்பு வில்லின் வைத்து எய்யும் மலரம்பு மழையில் மூழ்கவும், புதிய சாமரை வெண்குடை பூங்கொடி மிடைய எதிரில் கொள்கையின் நகர்வலங் கொண்டெழுந் தருளி மதுர மென்மொழி மங்கல வாழ்த்தொலி மலியக் கதியி லார்க்கெலாம் இன்னருட் காட்சிதந் தளித்து. 75 | சாமரை, வெண்குடை, கொடிகள் செறியவும் ஒப்பில்லாத செய்கையின் நகரை வலமாகச் சூழ்ந்து கொண்டு எழுந்தருளி இனிய மென்மொழியால் மங்கல வாழ்த்தொலி மல்கக் கடைப்பட்டவர் அன்றி நடையில்லார் யாவர்க்கும் காட்சியளித்து. இறைவன் தேவர்கட்கு வரமருளல் மீண்டு கோயிலி னுள்ளெழுந் தருளிமெல் லணைமேல் மாண்ட மெல்லியற் பனிவரை அணங்கொடும் வைகி ஆண்டு நின்றமா லயன்முதல் யாரையும் நோக்கி ஈண்டு நீர்வரம் வேண்டுவ கொண்மின்என் றிசைத்தான். 76 | மீண்டு கோயிலினுள் எழுந்தருளி மெத்தென்ற தவிசில் மாட்சிமைப்பட்ட மெல்லிய இயல்பினையுடைய இமாசல மன்னன் புதல்வியாரொடும் வீற்றிருந்து சந்நிதியில் நின்ற திருமால் அயன் முதலானோர் யாவரையும் பார்த்து ‘இப்பொழுது நீவிர் விரும்பியவற்றைப் பெற்றுக் கொண்மின்’ என்றருளினர். அறுசீரடி யாசிரிய விருத்தம் இருமுது குரவர் பாதம் இமையவர் வணங்கி இந்தத் திருமணங் காண்டல் பெற்றேம் உய்ந்தனந் திரைநீர் வைப்பின் மருவினர் வதுவை செய்யும் இடந்தொறும் மன்னி ஆங்காங் கிருநலம் உதவல் வேண்டும் இவ்விரு வீரும் என்றார். 77 | அம்மையப்பர் திருவடிகளைத்தேவர் வணங்கி ‘இந்தத் திருமணத்தைக் காணும் பேற்றினை உடையேம் ஆயினேம். ஆகலின், கடைத்தேறினோம். கடல் சூழுலகில் வைகித் திருமணஞ் செய்யப் பெறும் இடந்தொறும் எழுந்தருளி அங்கங்கே பெருநலங்களை வழங்கல் வேண்டும் இம்மணக் கோலம் பூண்ட இருவீரும்’ என வேண்டினர். |