| 		| இவ்வரம் அளித்தேங் காஞ்சி இருநகர் காவல் பூண்டு செவ்வன் இங் குறைமின் என்று சிவபிரான் பணித்த லோடும்
 அவ்வருள் சென்னி மேற்கொண் டகமகிழ்ந் திமையோ ரெல்லாங்
 கௌவைநீர்க் காஞ்சி மூதூர் காவல்கொண்டிருந்தார் அங்கண்.  78
 |       நீவிர் விரும்பிய இவ்வரத்தை நல்கினாம் காஞ்சியாகிய பெரிய     நகரத்தைக் காத்தலை மேற்கொண்டு நன்றே இங்குத் தங்கியிருமின் என்று
 சிவனார் கட்டளை யிட அதனைச் சிரமேற் றாங்கி மனமகிழ்ந்து தேவர்
 யாவரும் ஒலிக்கின்ற நீர் சூழ்ந்த காஞ்சி நகரைக்காவல் கொண்டிருந்தனர்.
 		| அரந்தைதீர் கவுரி கூற்றில் தோன்றிய அணங்கும் என்னை வரைந்துகொண்டருண்மோ என்று வணங்கிநின் றிரப்பஅந்நாள்
 கரந்தைவார் சடையோன் மன்றல் முடித்துநீ கச்சி மூதூர்
 புரந்திவண் உறைதி துர்க்காய் என்றருள் புரியப் பெற்று    	79
 |       துன்பத்தைத் தீர்க்க உமையம்மையார் அமிசமாகத் தோன்றிய    துர்க்கையும் ‘என்னை மணந்து கொண்டருளாய்’ என வேண்ட அந்நாளில்
 கரந்தையைச் சூடிய நீண்ட சடைப் பெருமானார் அவ்வம்மையைத்
 திருமணங் கொண்டு துர்க்கையே! நீ கச்சியாகிய பழம்பதியைக் காத்திங்கே
 உறைவாய்’ என்றருள் செய்யப் பெற்று.
 கவுசி கீச்சரம்	 		| கன்னிகாப் பெனும்பே ரெய்தக் கவுசிகி மடந்தை காஞ்சிப் பொன்னகர் காவல் பூண்டு பொங்கொளிக் கவுசி கீசன்
 தன்னைஅங் கிருவிப் பூசை தழைத்தபே ரன்பி னாற்றி
 இன்னல்தீர்ந் துலகம் உய்ய இருந்தனள் இருக்கும் நாளில்.   80
 |       கன்னி காப்பு என்னும் பெயரைப் பெறுமாறு ‘கவுசிகி’ காஞ்சி என்னும்    பொன்னகரைக்காவலை மேற்கொண்டு தழைக்கும் ஒளியுடைய கவுசி
 கீசப்பெருமானை அவ்விடத்தில் தாபித்துப்பூசனையை மிக்க பேரன்பினால்
 ஆற்றித் துன்பம் நீங்கி உலகம் செழிக்க இருந்தனள். இருக்கும் காலை,
 		| சும்பனே நிசும்பன் என்போர் உலகெலாந் துளக்க நோக்கி அம்புயக் கடவுள் போந்தங் கண்ணலுக் கியம்பி வேண்ட
 எம்பிரான் அருளாற் கன்னி விந்தவெற் பெய்தி வைகி
 வெம்புவா ளவுணர் தம்மைச் செகுத்துமீண் டினிது வாழ்ந்தாள்.  81
 |       சும்பன், நிசும்பன், என்னும் அவுணரிருவர் உலகை வருத்தக்     கண்டு பிரமன் வந்து திருவேகம்பரை வணங்கிக் குறையிரப்பப் பெருமான்
 கட்டளைப்படி ‘கவுசிகி’ விந்த மலையை அணுகித் தங்கிக் கொடிய
 வாளையுடைய அவுணரைக் கொன்று மீண்டு வந்தினிது வாழ்ந்தனர்.
 |