சாற்றுகா யத்திரி சதவு ருத்திரம் ஏற்றஐந் தெழுத்திவை விதியின் எண்ணியே. 23 | தத்தமக்கு முடிந்த நிலையில் எத்துணைச் சிறு பொழுதாயினும் துதித்தற்கரிய வேதங்களை ஓதி எடுத்தோதப்படும் காயத்திரி சத வுருத்திரம், இயைந்த பஞ்சாக்கரம் இவற்றை விதித்தபடி கணித்து, அனைத்தினும் நிறைந்துறை அடிகள்பூசனை தனக்குறு திருப்பள்ளித் தாமங் கொய்துபோய் மனைத்தலை வைத்துமேல் வாழ்க்கைக் கேய்ந்தன எனைத்துள கருமமும் இயல்பின் நாடியே. 24 | எவற்றினும் நிறைந்துறையும் சிவபிரானார் பூசனைக்குத் தக்க திருப்பள்ளித் தாமத்திற்குரிய மலர்களைக் கொய்துகொண்டு போய் மனையில் தொடுத்தற்குரிய இடத்தில் வைத்து மனைவாழ்க்கைக்கு வேண்டும் எவ்வகைச் செயல்களையும் ஒழுங்குபட ஆராய்ந்து முற்றுவித்து, கதிரவன் உச்சியி னணுகுங் காலையின் முதுசிவ கங்கைநீர் முறையின் மூழ்குபு மதியுறு நியதிகள் முடித்து மாநிழல் அதிபனை முறையுளி அணைந்து போற்றியே. 25 | உச்சிப்போதில் அறிவுருவான சிவகங்கையில் முறைப்படி மூழ்கி மதிப்புடைய நியமங்களை முற்றுவித்துத் திருவேகம்பப் பெருமானை விதிப்படி அடுத்துப் பரவி, மீண்டுதன் மனைவயின் மேவித் தற்பொருட் டீண்டிய அருட்குறி இறைவன் அர்ச்சனை பூண்டபே ரன்பினிற் புரிந்து பூசனைக் காண்டுறுப் பெனப்படும் அழலும் ஓம்பியே. 26 | திரும்பித் தன் மனையைச் சேர்ந்து ஆன்மார்த்தமாக எழுந்தருளி யுள்ள சிவலிங்க பூசனையைப் பேரன்பினால் செய்து அப்பூசனைக் கங்கமாகிய சிவாக்கினியையும் வழிபாடு செய்து, அறமுதல் இழிஞர்ஈ றான வற்றினுக் குறுபலி உதவிஊங் கெச்சம் ஐவகை முறையுளி யாற்றிஅவ் வேலை முன்னிய பெறலரு விருந்தினர் பேணி ஊட்டியே. 27 | |