காக்கைக்குப் பலியிடல் முதலாக இழிந்தவர் கடையாக எவற்றுக்கும் பொருந்திய பலியையிட்டு ஐவகை யாகங்களை முறைப்படி முடித்து அப்பொழுது அடுத்த பெறற்கரிய விருந்தினரை விரும்பி உண்பித்து, நீத்தவர்க் கையமும் நேர்ந்து நோயினர் வாய்த்தவெஞ் சூல்முதிர் மகளிர் பிள்ளைகள் மூத்துறு கிழவரை முந்த ஊட்டிப்பின் ஏத்துறு கிளைஞரோ டுண்டல் ஏயுமால். 28 | துறந்தவர்க்குப் பிச்சையிட்டு நோயுற்றவர், நிறை கருவுற்ற மகளிர், குழவிகள், வயதான் முதிர்ந்தவர், இவர் தம்மை முன்னர் உண்பித்துப் பின்பு ஏற்றமிக்க உறவினரோடு உண்ணுதல் தகும் எழுசீரடி யாசிரிய விருத்தம் கங்கைவார் சடிலக் கடவுளை நினைந்து கறிதயிர் நெய்யுடன் ஆவி, அங்கியை எழுப்பி ஆகுதிச் செய்கை யாகமுப் பதிற்றிரு கவளம், பங்கமில் விதியா லுண்டுகை பூசிப் பாகடை தின்றதன் பின்னர்ப், பொங்குபே ரன்பின் ஒக்கலோ டமர்ந்திப் புராணமே கேட்டிடல் வேண்டும். 29 கங்காதரராகிய பெருமானைத் துதித்து உள்ளே அனலை எழுப்பிக் கறிகள், தயிர், நெய் இவற்றுடன் வேள்வியி லிடும் அவிசாக முப்பத்திரண்டு கவளம் குற்றமில்லாத விதியினால் உண்டு கையையும் வாயையும் தூய்மை செய்து தாம்பூலம் தின்று பிறகு சுற்றத்தாரையும் உடன் வைத்துத் தழைத்த பேரன்பொடும் இருந்து காஞ்சிப் புராணத்தையே செவிமடுக்க வேண்டும். நான்மறைப் பொருளாய்க் கதைக்கெலாம் இடனாய் நாற்பயன் உதவும்ஏ கம்பன், மேன்மையுங் காம நோக்குடை இறைவி மேன்மையும் விளக்குவ திதுவே, நூன்முறை வருண நிலைகளின் ஒழுக்கம் நுண்ணிதின் தெரிப்பதும் இதுவாம், பான்மையாற் காஞ்சிப் புராணமே நாளும் பயில்வுறக் கேட்பது மரபால். 30 நான்கு வேதங்களின் பொருளாயும், எல்லா வரலாறுகளையும், தன்னுட் கொண்டதாயும், அறம் பொருளின்பம் வீடுகளை அளிப்பதாயும், திருவேகம்பர் காமாட்சி இவர்தம் மேன்மையை விளக்குவதாயும், நூல் வழக்குகளையும், வருணம் ஆசிரமம் இவற்றின் ஒழுக்கங்களையும் நுட்பமாக எடுத்து விளக்குவதும் இக்காஞ்சி புராணமே ஆகும் இயல்பினாலும் இதனையே நாடொறும் அடிப்பட்டுவரக் கேட்டலும் வழக்காம். |