அலர்கதிர் என்றூழ் மறைந்திடுங் காறும் ஆன்றவர் படித்திடக் கேட்டுக், குலவுசீர் அந்தி செய்கடன் முற்றிக் கோயிலைக் குறுகிஏ கம்பத், தலைவனைத் தொழுது மனைவயி னணுகிச் சமிதையின் அங்கிவேட் டமர்ந்து, பலருடன் அருந்தி மனைவியோ டிரவிற் பள்ளியின் மேவுதல் விதியே. 31 சூரியன் மறையுமளவும் அறிவொழுக்கங்களான் நிரம்பியவர் உரைக்க விரும்பிக் கேட்டுச் சிறப்பு விளங்கும் அத்தமன காலத்தில் அனுட்டானம் முதலிய முடித்துக் கோயிலை நெருங்கித் திருவேகம்பரை வணங்கி வீட்டிற் புகுந்து அக்கினி காரியம் செய்து பலருடனும் இருந்து உணவருந்தி மனையாளுடன் இரவில் படுக்கையிற் பொருந்துதல் விதியாகும். தருக்குறு வனப்பிற் பிறர்க்குரி யவரைத் தவ்வையில் தங்கையிற் காண்க, உருத்திர கணிகை மகளிரைத் தாயின் உன்னுக வயிணவ மடவார், அருப்பிளங் கொங்கைத் தாதிகள் மாட்டும் அன்னதே யாகலிற் புணர்ச்சி, விருப்பினை அவர்பால் மறப்பினும் எண்ணல் ஓம்புக நன்னெறி விழைவார். 32 இறுமாத்தற்குரிய பேரழகுடைய பிறர் மனைவியரைத் தமக்கையர் தங்கையராக வைத்து மதிக்க. கோயிற் றொண்டுசெய் உருத்திர கணிகையரைத் தாயென எண்ணுக. திருமால் கோயிற் பணிப்பெண்கள், மொட்டனைய இளங்கொங்கையையுடைய வீட்டேவற் பெண்டிர்கள் ஆகிய இவர் திறத்தும் அத் தாயுணர்ச்சியே எய்துக. அறவழியை விரும்புவோர் யாவரும் கலவியின்பத்தை மறந்தும் எண்ணுதலைப் பரிகரிக்க. இருட்சுரி கருமென் மலர்க்குழல் மனையாள் இளமுலைப் போகமும் மகவின், பொருட்டெனக் கொண்டே விலக்குநாள் ஒழித்துப் புணர்ந்தபின் நீங்கிவெம் பாந்தள், அரைக்கசைத் தருளும் அடிகள்ஈ ரடியும் அகந்தழீஇத் துயிலுக மற்றீங், குரைத்தவா றென்றும் ஒழுகுநர் எங்கோன் திருவருட் குரியவ ராவார். 33 இருண்டு நெய்த்து சுரிந்து தோன்றும் மலரணிந்த கூந்தலையுடைய மனைவியினிடத்துப் பெறும் போகத்தையும் மகவு பெறப்பொருட்டென மதித்து விலக்கிய நாள்களில் விலக்கி விதித்த நாட்களில் அம்மனையாளைக் கலந்து பின் பிரிந்து பாம்பை உதரபந்தனமும் (அரைக்கச்சு) ஆக வீக்கியருளும் சிவபிரானார். திருவடிகளை மனத்துட்கொண்டு தனித்துத் துயில்க. இங்குக் கூறியவாறென்றும் ஒழுகுவோர் இறைவன் திருவருட்குப் பாத்திர ராவர். |