ஒழுக்கப் படலம் 739


     கச்சிமா நகரிற் கம்பநா யகன்முன் கரிசறுத் தான்றவர் முகப்ப,
அச்சுவம் ஆடை ஊண்முதல் தானம் ஆதரித் தியைந்தவை அளித்தல்,
பொச்சமில் அவ்வக் கொடைப்பெரும் பயன்ஒன் றனந்தமாய்ப்
பொலியும்அவ் வரைப்பின், நச்சிமெய் யுணர்வு கொளுத்துவோன் வீடு
நணுகும்மேம் பட்டதித் தானம்.                            34

     காஞ்சியில் திருவேகம்பர் திருமுன்பு குற்றம் நீங்கி உயர்ந்தோர்
கொள்ளும்படி குதிரை, ஆடை, உணவு முதலாம் இவற்றை அன்றித்
தம்மால் இயைந்தவற்றைத் தானம் விரும்பிக் கொடுக்க, அவ்வப்
பொருளுக்கு ஏற்பக் கொடையினால் வரும் மெய்ப் பெரும் பயன் ஒன்று
பல மடங்காய்ப் பெருகும். அச்சந்நிதியில் விரும்பி மெய்யறிவைப் புகட்டும்
ஆசிரியன் வீட்டினைத் தலைப்படும் அத்துணைச் சிறப்புடையது அவ்விடம்.

     ஓதல்வேள் வீகை ஓதுவித் திடல்வேட் பித்தல்ஏற் றலுமுறும்
மறையோர்க், காதியின் மூன்றோ டளித்திடல் ஊர்தி படைத்தொழில்
அரசருக் குரிய, ஆதியின் மூன்று வாணிகம் பசுஏர் வணிகருக்
காகுமங் கவற்றுள் ஆதியின் மூன்றும் அல்லவை முறையே அவ்வவர்
விருத்திகட் காமால்.                                     35

     ஓதல், வேட்டல், ஈதல், ஓதுவித்தல், வேட்பித்தல், ஏற்றல், என்னும்
இவ்வாறும் வேதியர்க்குரியன. முன்னுள்ள மூன்றாகிய ஓதல், வேட்டல்,
ஈதல் என்னும் இவையும் காவல் செய்தல், ஊர்தி பழகல், படைக்கலப்
பயிற்சி என்னும் இவையும் ஆக ஆறும் அரசர்க் குரியன. முன் மூன்றாகிய
ஓதல், வேட்டல், ஈதல், என்னும் இவையும் வாணிபம் செய்தல், ஏருழுதல்,
பசுக் காத்தல் என்னும் இவையும் ஆக ஆறும் வணிகர்க் குரியன. பின்னுள்ள
மூன்றும் மூவகையவர்க்கும் தத்தமக்குப் பிழைப்புத் தொழிலாகும்.

     இருதமோ டமிர்த விருத்தியும் ஆன்றோர்க் கிசைவன
மிருதமூம் ஆகும். தருபிர மிருதஞ் சத்தியா நிருதம் தழுவலும்
ஒன்றுநாய் விருத்தி, ஒருவலே வேண்டும் உஞ்சநல் விருத்தி இருதமாம்
ஒன்றிர வாமல், வருவதே அமிர்தம் இரந்துறல் மிருதம் உழவின்
வந்துறல்பிர மிருதம்.                                     36

     இருதமும், அமிர்தமும், வயிறு வளர்த்தற்கு மூவகையருள்ளும்
தக்கோர் மேற்கொள்ளத் தகுவன. மிருதமும் சிறப்பின்று எனினும்
கொள்ளுதலும் ஒருவாறு பொருந்தும். பிரமிருதமும், சத்தியநிருதமும் ஆகிய
இரண்டனையும் விலக்கல் வேண்டும். ஒருவாறு தழுவிக்கொள்ளலும் ஆகும்.
நாய் விருத்தி எனப்படும் ஒன்றனை விலக்கலே வேண்டும். நல்ல
உஞ்சவிருத்தியாவது அறுக்கப்பட்ட வயல்களில் சிந்திக் கிடப்பவற்றைப்
பொறுக்கிப் பிழைத்தல் ஆகும். அஃது இருதம் எனப்படும்.