74காஞ்சிப் புராணம்


     மேல் மாடிகளில் அட்டிற்புகையும் சேறலின், தொகுப்பார் எனப்
பேசினர். கண்டோர் அறிவை அழகால் கவர்ந்து கொள்ளும் எனினும்
‘புலங்கொள்’ என்பதற்குப் பொருந்தும்.

இருசு டர்ப்பெருஞ் சிலைகளின் இயன்றமா ளிகைகள்
உருகு வெங்கதிர் தடவரச் சுடுகனல் உமிழும்
அருகு தண்கதிர் தடவரக் குளிர்புனல் அளிக்கும்
மருவி னோர்குணம் பிடிபடல் வையகத் தியல்பே.    74

     சூரிய காந்தக் கல்லும், சந்திரகாந்தக் கல்லும் கொண்டியற்றிய
மாளிகைகள் சூரியன் கிரணம் தீண்டுகையில் நெருப்புமிழும்; சந்திரனின்
கதிர் தீண்ட நீருமிழும். ஆகலின், பொருந்தினோர் இயல்பு பொருந்தப்
பெற்றோர்க்கும் வாய்த்தல் உலகியற்கையே ஆகும்.

     இருவகைக் கற்களும் மாளிகைக் குறுப்பாகலின் உறுப்பியின் செயலாகக்
கூறினர்.

நெறித்த கூந்தலார் மேல்நிலைச் சாளரக் கதவு
திறத்த லுந்தடை படும்அகிற் புகையெலாந் திரண்டு
புறத்தின் ஏகுவ வழுதிதன் சிறைப்படும் புயல்கள்
மறித்து விட்டநாள் விரைந்துவிண் சேறலை மானும்.   75

     மகளிர் மேல்வீடுகளிற் சன்னற் கதவுகளைத் திறந்த அளவிலே
கூந்தலுக்கு ஊட்டிய அகிற்புகை முற்றவும் தடை நீங்கித் திரண்டு
வெளியேறுதல் உக்கிர குமார பாண்டியரால் சிறைப்படுத்தப்பெற்ற
மேகங்கள் மீளவிடுத்த நாளில் விரைந்து விண்புகுதலை ஒக்கும்.

     நீர் புலரப் புகையூட்டுங்கால் சிக்கறுத்து நீட்டலின், ‘நெறித்த கூந்தலார்’
என்க. நுண்ணிய வழியினும் புகுதலிற் புகையாயிற்று. ‘புகை புகா இடங்களிற்
புகுவோன்’ (கம்பர்) வாக்கெண்ணுக. வழுதி பாண்டியன்.

தெரித்த பன்மணி மாடமேல் திகழ்ந்தபொற் குடத்து
விரித்த தண்கதிர்க் கடவுள்நின் றசைதல்வேட் கோவர்
திரித்து விட்டசக் கரமென லாகும்அத் திகிரி
பரித்த பச்சைமண் ணென்னலாம் அதற்பயில் களங்கம்.   76

     நிலாமணி முற்றத்தில் வைத்த பொன்னாலியன்ற குடத்தின்மேல்
கலை நிரம்பிய சந்திரன் நின்றசைதல், குயவர் சுழற்றி விட்ட சக்கரத்தின்
அசைவினை ஒக்கும். அச்சந்திரனிடத்துள்ள மறு அச்சக்கரத்தில் ஈரக்
களிமண்ணெனல் தகும். எனவே, பொற்குடம் அச்சக்கரத்தினின்றும்
அறுத்தெடுத்த குடமொக்கும் என்க.

நிரவு நித்திலத் தோரணம் செழுங்கதிர் நிரைகள்
விரவி விண்ணெலாம் வெள்ளொளி விரித்தலான் அன்றே
பரவை மேழெும் போதும்வீழ் பருவத்தும் அல்லால்
இரவி மண்டிலச் சேயொளி விளங்கிடா இயல்பே.      77