746காஞ்சிப் புராணம்


இவற்றின் வரு போக உயிர்க்குப் பருவத்தை நோக்கும் எவற்றினையும்
கடந்த பொருள் சிவபிரானாரே எனல் பிணக்கர்க்கு அரியலாகாத வேதத்தின்
உட்கிடையாவது என்று உபக்கிரம உபசங்கார முதலாகிய இலிங்கத்தால்
ஒருதலை துணிதல் கேள்வி ஆகும்.

இலிங்கம்-துணிதற்குக் கருவி

உவமையின் ஏதுத் தன்னாற் கேட்டதை உள்ளங்கொள்ள
அவமறச் சிந்தை செய்தல் சிந்தனை அதனைப் பல்காற்
சிவணுறப் பயிற்சி செய்கை தெளிதலாம் விளங்கக் காண்டல்
தவலறு நிட்டை யென்று சாற்றுவர் புலமை சான்றோர்.     58

     ஏதுக்கள், எடுத்துக் காட்டுக்களால் கேட்டவற்றை வீண் சிந்தனைகள்
அகலச் சிந்தித்தல் சிந்தனை ஆகும். அதனைப் பன்முறை கலக்குமாறு
பயிற்சி செய்தல் தெளிதலாகும். அறிவில் வைத்துத் தெளியக் காணுதல்
குற்றமற்ற நிட்டை என்று அறிவான் முதிர்ந்தோர் விரித்துரைப்பர்.

இத்திறம் பயின்று வைகி இருவகைப் பற்றும் நீத்த
உத்தமத் துறவின் மேலோர் ஊர்வயின் பிச்சை யேற்றுச்
சுத்தநீர் அலம்பி முக்கட் சுடரினுக் கூட்டிப் பின்னர்
அத்தகு விதியின் ஓர்போ தெண்பிடி அருந்தல் வேண்டும்.   59

     இத்திறத்தினைப் பல்கால் பழகி யான் எனது என்னும் அகப்பற்றும்
புறப்பற்றும் விட்ட துறவின் முதன்மை பெற்றோர் ஊராரிடும் பிச்சை
உணவினை ஏற்றுச் சுத்த நீரால் அலம்பி முக்கண்ணுடைய முதல்வனுக்கு
நிவேதித்துப் பின்பு எட்டுப் பிடி அளவுடைய உணவை ஒருபொழுதே
உண்ணுதல் வேண்டும்.

அல்லவை முழுதும் நீக்கல் ஆன்றவர் கழித்த தூசு
கல்லசும் பெற்றிக் கோடல் காழ்மரத் தடியின் மேவல்
பல்லவும் ஒப்பக் காண்டல் தமியனாய்ப் படர்தல் வேற்றுப்
புல்லியர் இணக்கந் தீர்தல் பொறிவழி மனஞ்செல் லாமை.   60

     பாவச் செயல்களை முற்றவும் விடுத்தலும், பெரியோர் உடுத்துக்
கழித்த உடையை நீரில் நனைத்துக் கல்லில் எறிந்து உலர்த்தி உடுத்தலும்,
வயிரமேறிய மரத்தடியில் தங்குதலும், பல்லுயிரையும் வெறுப்பு விருப்பின்றி
ஒப்ப நோக்குதலும், தனியனாய் யாண்டுஞ் சேறலும், அறிவைத் திரிக்கும்
கீழ் மக்களொடு கூடாமையும், ஐம்பொறிகளின் வழி மனத்தைப்
புறப்பொருள்களிற் செல்ல விடாமையும்,