நிரம்பிய முத்துக்களால் அமைந்த தோரணங்களினுடைய முதிர்ந்த கதிரொளி வரிசைகள் விண்ணிடம் முழுதும் பரவி வெள்ளொளியைப் பரப்புதலானே, கடல்மேல் தோன்றும் போதும் மறையும் போதும் (உதயாஸ்தமனம்) அன்றிச் சூரிய வட்டத்தினுடைய சிவந்த ஒளி புலப்படாத காரணம். சூரியன் விண்ணிடத்துள்ள அளவும், பலவாய் ஒளி மிக்குள்ள முத்துத் தோரண வெள்ளொளியில் மூழ்கித் திரிவுபடுகிறான். திங்கள் செங்கதி ராளனென் றுரைப்பதே தேற்றம் அங்கண் நித்திலத் தோரணத் தொளியினில் அரிபோல் தங்கி வெண்கதி ராயினன் அதற்குறுஞ் சான்று துங்க மாலையுங் காலையுஞ் சிவந்துதோன் றுவதே. 78 | சந்திரனைச் சிவந்த கதிர்களையுடையோன் என மதித்தலும், பிறர்க்குரைத்தலும், தெளிவுக் காட்சியாகும். சூரியனைப்போலச் சந்திரனும் முத்துத் தோரண வெள்ளொளியால் திரிந்து வெண்கதிர் ஆயினன். அவ்வொளி படாத மாலையும், காலையும் அச்சந்திரன் சிவந்து தோன்றுதலே அதற்குரிய சாட்சி என்க. அங்கண்-(கச்சியில்) அவ்விடத்து. அந்தியும், சந்தியும் வழிபாட்டிற்குரிய காலமாகலின், துங்கம் (உயர்ச்சி.) இருகாலங்களுக்கும் நின்றது. உறுஞ்சான்று- போதுமான சாட்சி. சிவந்து தோன்றுதலும், தோன்றாமையும், இருகாலங்களும் எடுத்தோதுதலின் ‘உறுஞ்சான்று’ என்றனர். ‘சாலுங்கரி’ (திருக். ) என்புழிப்போல. அணங்க னார்நகைத் திடுந்தொறும் ஆங்கவர் வளர்த்த கணங்கொள் முல்லைகள் முகைப்பன அவர்நகைக் கவினை இணங்கி நாம்கவர்ந் தொளித்தமை அறிந்தனர் என்றே வணங்கி நாணினால் உடன்சிரித் திடுவது மானும். 79 | தெய்வப் பெண்ணொப்பவர் புன்சிரிப்புக் கொள்ளுந்தோறும் அம்மகளிர் வளர்த்த முல்லைக் கொடிகள் அரும்புதல், அவர்தம் பற்களின் அழகை நட்புப் பூண்டு வௌவி மறைத்தமையை அறிந்து சிரித்தனர் என்று நாணத்தால் வளைந்து ஒக்கச் சிரித்தலை ஒக்கும். நகை-பல், புன் சிரிப்பு. சிரிப்பிற் சிறிது பல் தோற்றுதலின் இரண்டற்கும் பெயராயிற்று. மகளிர் கற்பின் அறிகுறியாக முல்லை வளர்ப்பவர். மகளிரான் மலரும் மரங்கள் பத்து, சிரிப்பின் அரும்புவது முல்லைக்கொடி, சிரித்தலும் ஓர்வகை ஒறுப்பென்பது பெறப்பட்டது. கொடி அரும்பால் பொறை ஆற்றாது வணங்குதல். ஆட கத்தியல் மேல்நிலை மிசைஅணங் கனையார் மாட கத்தனி யாழிசைக் குவந்துறும் வான நாட கத்துவெண் களிற்றினை நளினமென் மலர்ப்பூம் பாட கத்தடி நடையினால் பருவர லுறுப்பார். 80 | |