சோமாஸ்கந்தர் மேற்படி வேறு அடலிற் கொதிக்கும் படைஆழி அண்ணல் முதலோர் ஏத்தெடுப்பத் தடவுச் சீயப் பிடர்த்தலையிற் கவினும் மணிப்பூந் தவிசும்பர்க் கடவுட் பிராட்டி உடங்கிருப்பக் கதிர்வேற் காளை நள்ளிருப்ப நடலைப் பிறவி மருந்தாகி வைகும் நாதன் திருவுருவம். 7 | திருமால் முதலோர் போற்றவும் சிங்காசனத்தின்மிசை உமையம்மைக்கும் பெருமானுக்கும் இடையே முருகப் பெருமானார் உடனிருப்பவும் துன்பத்திற்கு ஏதுவாகிய பிறவிப் பிணிக்கு மருந்தாகி வீற்றிருக்கும் வடிவம் சகஉமாஸ்கந்தர் திருவுருவம். ஏகபாதர் அடுப்பார்க் கருளும் ஒருநாளும் அம்பொற் கமல விழிமூன்றும் படப்பாம் பணிந்த புயம்நான்கும் சூலப் படையும் எழில்வயங்க இடப்பால் அரியை வலத்தயனை எழுநாற் கோடி உருத்திரரை நடுப்பால் தோற்றி ஐயைந்து வடிவும் உடனாம் நலம்பிறக்கி. 8 | நண்ணினர்க்கு நலம்புரியும் ஓர் திரு வடியும், முக்கண்ணும், நாற்றோளும், திரிசூலமும், அழகுற விளங்கவும் இடத்தினும் வலத்தினும் நடுவினும் முறையே திருமாலையும் பிரமனையும் இருபத்தெட்டு கோடி உருத்திரரையும் தோற்றுவித்துச் சிவ வடிவங்கள் இருபத்தைந்தும் ஒக்க விளங்கும் நலத்தை விளங்க வைத்தும், புகன்ற இடப்பாற் பகுதியினைப் புந்தித் தலத்திற் புந்தியினை அகங்கா ரத்தின் உறுதன்மாத் திரையிற் பொறியின் அவ்வவற்றைத் தகுந்தாள் குய்யம் உந்திகளம் தலையிற் பார்நீர் அனல்வளிவான் மிகுஞ்சீர் விழியி னிடத்திரவி வெண்கேழ் மதியைப் படைத்தருளி. | முற்கூறிய இடப் பக்கத்தில் பிரகிருதியையும், இதயத்தில் புத்தியையும் பூதாதி அகங்காரத்தில் தன்மாத்திரைகளையும் தைசத அகங்காரத்தில் ஐம்பொறிகளையும் தக்க திருவடி, குறி, கொப்பூழ், கழுத்து, தலை என்னப்பெறும் அங்கங்களில் முறையே நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் இவற்றையும் சிறப்புடைய வலக்கண்ணில் சூரியனையும் இடக்கண்ணில் சந்திரனையும் தோற்றுவித்தருளி, அடியின் அடங்குங் கீழுலக மனைத்தும் அடியின் உறத்தோற்றி, முடியின் அடங்கும் மேலுலக முழுதும் முடிப்பால் அளித்தருளிப், படியில் கருணைப் பிழம்பாகிப் பரசும் அடியார் அகவிளக்காய்க், கொடிய மலநோய் அரட்டொதுக்குங் கோணைப் பெருமான் திருவுருவம். 10 |