நிற்கும்படி தாக்கும் பிரம்பினை உள்ளங் கையிற் கொண்ட திருநந்தி தேவர்க்கு அருள் வழங்கிச் சிவகணங்கள் போற்ற வீற்றிருக்கும் சந்திரனை முடியிலணிந்த சந்திரசேகரர் திருவுருவம் நடராசர் சிலம்பின் ஒலிகேட் டருகணையுஞ்செங்கால் அன்னப் பெடைமானப் புலம்பு மணிப்பூண் முலைஉமையாள் மகிழ்ந்து நோக்கிப் புடைநிற்ப உலம்பி மறைகள் ஓலமிட உம்பர் பழிச்ச முடிக்கங்கை அலம்ப அழகார் பெருந்திருக்கூத் தாடும் பெருமான் திருஉருவம். | திருச் சிலம்பின் ஒலியைத் தனது சேவலின் குரலென்று மயங்கி நெருங்கும் சிவந்த கால்களையுடைய வெண்ணிற அன்னப்பேடையை ஒப்ப ஒலிக்கும் அணிகளைப் பூண்ட சிவகாமி அம்மையார் மகிழ்ந்து நோக்கி ஒரு மருங்கு ஒதுங்கி நிற்பவும் ஒலித்து மறைகள் முறையிடவும் தேவர் போற்றவும் முடியிற் கங்கை ஒலிக்கவும் அழகு நிறைந்த பெரிய திருக்கூத்தினைப் புரியும் நடராசப் பெருமான் திருவுருவம், உக்கிரர் வடாது மலையிற் புயம்நான்கும் மலர்க்கண் மூன்றும் உருத்திரமும் தடாய படப்பாப் பரைநாணுங் கபாலக் கரமுந் தழலன்றிக் கடாது சிவந்த சுரிபங்கி கவின்ற முடியும் வெண்ணிறமும் கெடாத வனப்பிற் பெருங்கோலங் கெழீஇய பெருமான் திருஉருவம். 15 | மேருமலையை ஒக்கும் நான்கு தோள்களும் செந்தாமரை மலர் போலும் மூன்று கண்களும் உக்கிரமும் அகன்ற படமுடைய பாம்பால் அமைந்த அரைநாணும் பிரமகபாலந் தாங்கிய திருக்கையும் நெருப்பை அன்றிப் பிற ஒவ்வாது சிவந்த சுரிந்த சிகையும் அழகிய முடியும் வெண்ணிறமும் அழியாத அழகுடைய பெருங்கோலமும் அமைந்த பெருமான் திரு உருவம், புரசைக் களிறட் டுரிபோர்த்த கோலப் பொலிவும் புகைவடிவும் அரசச் சீய உரிகொண்ட உத்த ரீயத் தனியழகும் பிரசக் கமல மெனச்சிவந்த விழிகள் மூன்றும் பிறங்குலகம் பரசத் தகுவெண் டலைதண்டம் பரித்த கரமுங் கூரெயிறும். 16 | கழுத்திடு கயிறுடைய மதயானையை அழித்து அதன் தோலைப் போர்வையாகக் கொண்ட அழகிய கோலமும், புகை நிறமும், நரசிங்கத்தின் தோலை மேலாடையாகக் கொண்ட ஒப்பற்ற அழகும், தேனூறுந் தாமரை மலரெனச் சிவந்த மூன்று கண்களும், சான்றோர் போற்றத் தக்க வெண்டலையையும் தண்டத்தையும் ஏந்திய திருக்கைகளும் கூரிய பற்களும், |