754காஞ்சிப் புராணம்


     மருவிற் பொலிந்த மலர்க்கிழவன் வகுத்த அண்டம்
அனைத்தினையும், பொரியிற் கொறித்துக் கொறித்துமிழும்
பூட்கைக்குரண்டப் பெயரானைச், செருவிற் படுத்த வெள்ளிறகு
திங்கட் குழவிக் கதிர் கிளைத்திட், டுருவுற் றெழுந்தா லெனமாடே
ஒளிரச் செருகுந் திருமுடியும்.                              17

     மணமுடைய மலரவன் படைத்த அண்டங்கள் அனைத்தினையும் நெற்
பொரி போலப் பல்லில் அதுக்கி உமியைப் போலக் கோதினை உமிழவல்ல
மனவலியுடைய குரண்டாசுரனைப் போரில் அழித்து வெள்ளிய இறகினை
இளம்பிறை ஒளி தழைத்தெழுந்தாலென ஒருபுடை ஒளிரச் செருகிய
திருமுடியும்,

     பகன் என்னும் அசுரன் (குரண்டம்-கொக்கு.) கொக்கு வடிவில் தீங்கு
செய்யச் சிவபிரான் அவனை அழித்துச் சிறகை அணிந்து தேவர் துயரைத்
தீர்த்தனர்.

திருமால் பணிலக் கோவைநிரை வயங்கும் புயமுந் தெரித்தருளிப்
பெருநீர் அளக்கர் வாய்மடுத்தும் உங்கா ரப்பே ரொலிவிளைத்தும்
வெருவா வீரம் படநகைத்தும் பூத கணங்கள் மிடைந்தேத்த
அருளா னந்த நடங்குயிற்றும் அண்டர் பெருமான் திருவுருவம்.   18

     திருமால் பலருடைய சங்கு மாலை அணிந்த தோளொடும் கடல் நீரை
நிரம்பப் பருகியும் உங்காரப் பேரொலி முழக்கியும் அஞ்சாத வீர நகையைப்
புரிந்தும் பூதகணங்கள் நெருங்கித் தொழ அருளும் ஆனந்தத் திருக்கூத்தைப்
புலப்பட நடிக்கும் பெருமான் திருவுருவம்,

அர்த்தநாரீஸ்வரர்

உமையுந் தானும் வேறன்மை உருவி னிடத்துந் தெளிப்பான்போல்
இமைய மயிலை ஒருபாதி வடிவின் இருவி நாற்கரத்தும்
அமைய வனசந் திரிசூலம் அபய வரதம் இவைதாங்கி
நமையும் உய்யக் கொண்டருளும் நாரி பாகன் திருவுருவம்.    19

     உமையம்மையுந் தாமும் ஒன்றாந் தன்மையை வடிவினும் வைத்து
விளக்குதல் போல அம்மையை இடப்பாகத்தில் நிறுவி நாற்கரங்களும் ஏற்பத்
தாமரை மலரையும் திரிசூலத்தையும் ஏந்தி அபய வரதமொடும் நம்மையும்
ஆட்கொண்டருளும் அம்மை அப்பர் திருவுருவம்,

இலகுளீசர்

அடுத்தங் குடனாம் பரம்பொருளை அன்றே விரவ வொட்டாமல்
தடுத்து முக்கூற் றுயிருணர்வைத் தகையும் அவிச்சை முழுதிரிய
மடுத்த கருணைத் திருநோக்கின் மாணாக் கருக்குப் பொருளுரைப்ப
எடுத்த கரத்தான் வீற்றிருக்கும் இலகுளீசன் திருவுருவம்.       20