சிவபுண்ணியப் படலம் 755


     ஒட்டி உடனாகும் முதற்பொருளை உயிர் கூடாதபடி அநாதியே தடுத்து
ஒரு மலம் இரு மலம் மும்மலத்தால் மூவகையர் ஆக உணர்வை மறைத்து
நிற்கும் ஆணவ வலி முழுதும் கெடப் பொழிகின்ற அருட்டிரு நோக்கத்தால்
மாணாக்கருக்குப் பொருள் கூற விளக்கும் எடுத்த கரத்தொடும் வீற்றிருக்கும்
இலகுளீசர் திருவுருவம்,

நீலகண்டர்

நவில் “ஓம் நீல கண்டாய நம”என் றியம்பும் எட்டெழுத்தும்
நுவல்வார் மீள மலக்கூட்டின் நுழையா வாறு பெறஇமையோர்
கவலா திரங்கி ஆலாலங் கதிர்ப்பூங் கரத்தின் ஏந்திஅரிச்
சுவலார் அணையின் வீற்றிருக்குஞ் சோதிச் சுடரோன் திருவுருவம். 21

     கணிக்கப்படும் ‘ஓம் நீலகண்டாய நம’ என்றோதப்படும் திரு எழுத்து
எட்டனையும் அடிபட்டுரைப்போர் மீளவும் மலக்குரம்பையாகிய சிறையில்
புகாத வழியை அடைய இமையோர் வருந்தாதபடி கருணைபூத்து விடத்தை
மலர்க்கரத்தில் தாங்கிச் சிங்கத்தின் பிடரிமிசை அமைந்த இருக்கையில்
வீற்றிருக்கும் பேரொளி வடிவினராம் திருவுருவம்,

சலந்தராரி

இருகூ றாகச் சலந்தரனை இறுத்து மாட்டி அவ்வடிவம்
அருகே தோன்றச் சுதரிசனம் அங்கைத் தலத்தின் மிசைஏந்தி
முருகார் கடுக்கைத் தண்ணறும்பூந் தொடையல் வாகை முடிவிளங்கத்
திருவார் காட்சி அளித்தருளுந் தேவர் கோமான் திருவுருவம்.   22

     சலந்தரனை இருகூறு படப் பிளந்து கொன்று அச்சலந்தரன் வடிவம்
அருகில் விளங்க அழகிய கரத்தில் அழித்த சுதரிசனம் என்னும் சக்கரத்தை
ஏந்தி நறுமணங் கமழும் கொன்றை மலர்மாலை வெற்றி மாலையாகத்
திருமுடியில் விளங்கும்படி திருக்கோலம் காட்டி நிற்கும் சலந்தராரி
திருவுருவம்,

சக்கரதானர்

வழிதீஞ் சுவைக்கள் வாய்மடுத்து மழலைச் சுரும்பர் இசைமிழற்றுஞ்
செழிபூங் கமலம் ஒன்றினுக்குத் திருந்து காதல் மெய்யன்பின்
விழிசூன் றடியின் அருச்சித்த விறல்மா யனுக்குச் சுதரிசனங்
கழிபே ரருளால் ஈந்தருளுங் கடவுட் பெருமான் திருவுருவம்.    23

     வழியும் இனிய தேனைப் பருகி வண்டு பாடுதற்கிடனாகிய தாமரை
மலர்ஒன்றன் குறைவை நீக்குதற் பொருட்டுத் திருந்திய மெய்யன்பினால்
கண்ணைப் பெயர்த்து மலராக அருச்சனை செய்த திண்ணிய திருமாலுக்கு
மிகப் பெருங் கருணையொடும் சுதரிசனத்தை வழங்கும் சக்கரதானர்
திருவுருவம்,