பத்திராசனத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவியின் திருவுருவைக் காஞ்சியில் அமைத்தவர்கள் தம் சுற்றத்தொடும் இன்பமிக நெடுங்காலம் வாழ்ந்து இறுதியில் திருவடிகலப்பர். ஐங்கரப் பெருமான் அறுமுகக் குரிசில் அறிவிலான் வேள்விபாழ் படுத்த, வன்கழல் வீரன் கேத்திர பால வயிரவர் தம்மைஆங் கமைப்போர், செங்கதிர் துர்க்கை மாயனை அயனைத் திருத்தக நிறுவினர் தாமும், புங்கவர் வழுத்தும் அவ்வவர் உலகம் புகூஉப்பெரும் பயன் நுகர்ந் தமர்வார். 44 விநாயகப் பெருமானார், முருகப்பெருமானார், தக்கன்வேள்வியை அழித்த வீரபத்திரர், க்ஷேத்திரபால வயிரவர் என்னும் இம்மூர்த்திகளைத் தாபித்துத் தம் சுற்றமும் இன்புற நெடிது காலம் வாழ்ந்து இறுதியில் திருவடிகளை அடைவர், அறநெறி ஒழுகிச் சிவாகமம் மறைநூல் அஞ்செழுத் துண்மைதேர்ந் துணர்ந்து, முறையுளி வழாது கண்டிகை பூண்டு முழுதுநீ றணிந்துவெள் விடைஊர், இறையவன் அடிக்கீழ்ப் பொதுவறு சிறப்பின் எண்வகை உழுவல்அன் புடையார், மறையவர் வேந்தர் வணிகர்வே ளாளர் மற்றையர் யாவரே யாக. 45 அறவழியில் நடந்து வேத சிவாகமங்களின் உண்மைப் பொருளாம் திரு அஞ்செழுத்தின் உண்மையை ஓர்ந்து விதியினின்றும் வழுவாது உருத்திராக்கம் பூண்டு திருமேனி முற்றும் வெண்ணீறு பூசி விடையூரும் பெருமான் திருவடிக்கீழ்ப் பொதுநீக்கிச் சிறப்பாக எண்வகையாம் எழுபிறப்பினும் தொடர்ந்த அன்பினர் நால்வருணத் தரேயாக அனுலோமர் பிரதிலோமர் பிறரேயாக, மன்னிய பிரம சரியம்இல் வாழ்க்கை வனம்புரி நிலையின ராக, அன்னவர் தமக்கு மனைநிலை ஈகை யாதிய அளித்துவண் காஞ்சித், தொன்னகர் வரைப்பிற் கவலையின் றிருத்துந் தூயவர் கறைமிடற்றிறைவன், தன்னருள் வடிவம் பதிட்டைசெய் தவர்க்குச் சாற்றிய பயன்முழு தடைவார் 46 நிலைத்த பிரமசரியம், இல்வாழ்க்கை, வானப்பிரத்தம் என்னும் நிலையினரேயாகச் சிறப்புற வழிபாடு செய்யும் அவர்க்கு வீடு, பொன் முதலிய கொடுத்துக் காஞ்சியில் குடியிருந்தும் நல்லார் சிவபெருமான் திருவுருவைத் தாபித்தவர்க்கு உரிய பயன் முழுதும் பெற்று வாழ்வார், பற்றெலாம் ஈசன் திருவடித் தலத்தே பதித்துடற் சார்பற நீத்த, அற்றமில் காட்சிப் பெருந்துற வுடையார் அடியிணை |