சிவபுண்ணியப் படலம் 765


மெய்யன் ஆலயப் பணிஉடல் விருத்தியைக் குறித்துச்
செய்து ளோர்பெறும் பயனும்ஒண் மகமெலாஞ் செய்தார்
எய்து மாறரி தென்றிடில் உறுதியோ டியற்றும்
உய்தி யாளருக் குரைத்திட வேண்டுவ தெவனோ.      55

     சத்தியனாகிய சிவபிரானார் தம் திருக்கோயிலைக் கூலியின் பொருட்டுக்
கட்டினவர் எய்தும் பயன் அளவு விதிப்படி யாகங்கள் பலவும் செய்த
புண்ணியரும் பெறார் எனின் துணிவுடையராய்க் கோயிலை வகுத்த உய்யத்
தக்கவர்தம் பயனை உரைக்குமாறு அரிதென்க.

எட்டுச் செங்கலி னாயினும் ஈர்ம்புனல் வேணி
வட்டச் சென்னியான் ஆலயத் திருப்பணி வகுத்தல்
ஒட்டிப் பெற்றஇவ் வுடற்பய னாவதென் றுணர்வீர்
அட்டுத் தீவினை ஐந்தவித் தொழுகும்அந் தணர்காள்.   56

     தீவினையைக் கெடுத்து ஐம்பொறிகளை அடக்கி மெய்ந்நெயிற்
செல்லும் அந்தணீர், கங்கையை வட்டமாகிய சடையிடை வைத்த பிரானார்க்கு
எட்டுச் செங்கல் கொண்டாயினும் விளையாடும் சிறுவரை ஒப்பச் சிவாலயம்
வகுத்தலே இவ்வுடம் பெடுத்ததன் பயனென அறிமின்.

ஏற்றின் மேலவன் ஆலயத் திருப்பணி இயற்றும்
ஆற்றல் இல்லருங் கோயிலின் அகம்புறம் எங்கும்
போற்றி நுண்ணுயிர் மெல்லென அலகிடல் புரிதல்
நூற்று நூறுசாந் திராயண கிரிச்சரம் நோக்கும்.       57

     விடையூரும் விமலர்க்கு ஆலயம் எடுத்தற்கு வேண்டும் ஆற்றல்
இல்லாதவரும் கோயிலின் அகத்திலும் புறத்திலும் நுண்ணிய உடம்புடைய
எறும்பு முதலாம் இனங்களுக்கும் தீங்கு நேராதவாறு மெத்தென விளக்குமாறு
கொண்டு திருவலகிடுதல், பதினாயிரம் சாந்திராயண விரதம், கிரிச்சரவிரத
பயன்களை ஒக்கும்.

அறுசீரடி யாசிரிய விருத்தம்

குடம்புரை செருத்தல் தீம்பால் கொழித்திடுங் கபிலை ஆப்பி
இடம்படும் விசும்பின் ஏந்தி வடித்தநீர் வாக்கி என்றும்
அடம்பணி சடிலத் தெங்கோன் ஆலயம் மெழுகு வோர்க்குப்
படும்பயன் அதனின் நூறு மடங்கெனப் பகரும் நூல்கள்.    58

     குடமொக்கும் மடியினின்றும் இனிய பாலைப் பொழியும் கபிலை
என்னும் புண்ணியப் பசுவின் (மலம்) சாணத்தைக் கீழே விழாமல் ஏந்தி
வடிகட்டிய நீரைக்கொண்டு கரைத்து அடம்பம் பூவை முடியில்