சிவபுண்ணியப் படலம் 767


     மந்தார மலரில் இந்திரனும், பொலிவுடைய ஊமத்தம் பூவில்
குபேரனும், நாயுருவில் இயமனும் விரும்பி உறைவர். தாமரை மலரில்
சிவபெருமான் மேவுவர், பசிய மகரந்தமுடைய நீலோற்பல மலரில்
உமையம்மையார் விரும்பி உறைவர்.

மேதகு வாசத் தெல்லாம் மலைமகள் விரும்பி வைகும்
ஆதலால் இனைய பூக்கள் அமைந்தவைக் கொண்டு செய்யும்
பாதபூ சனைக்கே கம்பப் பரம்பொருள் கருணை கூரும்
போதணி புயத்தின் மேலாம் பூங்தொடை தொடுத்துச் சாத்தல்.  63

     மேன்மை பொருந்திய நறுமணப் பூக்கள் எவற்றிலும் உமையம்மையார்
உவந்துறைவர் ஆகலின் இத்தகைய மலர்களையும் தழைகளையும்
வாய்த்தவற்றைக் கொண்டு அடிமலரில் அருச்சித்தற்குத் திருவேகம்பப்
பெருமான் பேரருள் சுரக்கும், மலரணிதற்குரிய திருத்தோளில் மாலை
தொடுத்துச் சாத்துதல்,

அவற்றினும் அதிக மாகும் அலர்ந்தபுண் டரிக மாலை
எவற்றினுஞ் சிறந்த மேன்மை எழிற்கருங் குவளைப் போது
நிவப்புறு நூற்றுப் பத்தால் நெடுந்தொடை மாலை சாத்திற்
பவத்தொகை இரிய நூறி முத்தியே பயக்கும் அம்மா.      64

     முற்கூறிய முறையினும் மிக்குப் பயன் தரும். தாமரை மலராலும்
எவற்றினும் சிறந்த நீலோற்பல மலரானும் உயர்வுற ஆயிரம் மலர்களால்
மாலை தொடுத்துப் பெருமானார்க்கும் பெருமாட்டியார்க்கும் சாத்தினால்
பிறவி நோயை முற்றும் கெடுத்து முத்தியையே வழங்கும்.

ஓங்குயர் திருவே கம்பம் உடையவன் திருமுன் வாசம்
வீங்குநெய் விளக்குத் தூபம் விளைத்திடின் முருகு நாறிப்
பாங்கொளி பரப்பு மேனி படைத்துவெண் கயிலை நண்ணித்
தேங்கருட் பரமானந்த வேலையுள் திளைத்து வாழ்வார்.    65

     திருவேகம்பப் பெருமான் திருமுன்னர் மணமிகும் நெய் தீபமும்,
நறும் புகையும் பணிபுரிந்தால் நறுமணங்கமழும் ஒளியுடைய உடம்பினராய்க்
கயிலையை அடைந்து அருளுடைய பரமானந்தத்தில் மூழ்கி வாழ்வார்.

மட்டவிழ் பொழில்சூழ் கம்ப வரைப்பிடை மதிதேய் பக்கத்
தட்டமி பதினான் கான தினங்களின் அன்பு கூர்ந்து
கட்டெழிற் கபிலை ஆன்நெய் கலந்தகுங் கிலியத் தூபம்
இட்டவர் செய்த குற்றம் ஆயிரம் பொறுப்பன் எங்கோன்.   66