தேனைத் துளிக்கின்ற சோலைகள் சூழ்ந்த திருவேகம்பத்தில் கிருட்டினபக்கத்து வரும் அட்டமி சதுர்த்தசி தினங்களில் அன்பு பெருகிப் பேரழகுடைய கபிலை என்னும் பசுவினது நெய்யொடு கலந்த குங்கிலியத் தூபம் புகைத்தவர் செய்த பிழைகள் ஆயிரமும் பொறுப்பர் எம்பெருமானார். வடித்தநீர் வாசம் பெய்து வள்ளலுக் காட்டல் செய்யிற் படித்தலைப் பத்து நூறு பரிமேதஞ் செய்த பேறாம் கடிச்செழுந் தயிலம் ஆன்நெய் கமழும்ஐந் தமிர்தம் எம்மான் அடித்துணைக் குறும்ஆ னைந்தும் ஒன்றின்ஒன் றதிக மாமால். 67 | வடித்த நீரில் பச்சைக் கருப்பூரம் முதலாம் நறுமணப் பொருள் களிட்டுப் பெருமானார்க்குத் திருமுழுக் காட்டினால் உலகில் ஆயிரம் அசுவமேதம் செய்த பயனை அது வழங்கும். மணங்கமழும் எள்ளின் நெய், பசுநெய், மணமுடைய பஞ்சாமிர்தம், வழிபாட்டிற்குரிய பஞ்சகௌவியம் என்ற இவை ஒன்றனைவிட ஒன்று ஏற்றமுடையதாகும். மண்டுபே ரன்பின் ஆன்பால் மணிமுடிக் காட்டு வோர்பால் அண்டர்தம் பெருமான் மேன்மேல் அளவிலா மகிழ்ச்சி கூரும் வெண்டயிர் கருப்பஞ் சாறு விளைமதுப் பிறவும் ஆட்டின் எண்டபும் வேள்வி யெல்லாம் இயற்றிய பெரும்பே றெய்தும். 68 | செறிந்த மெய்யன்பொடும் பசுப்பாலைத் திருமுழுக்காட்டுவோர் திறத்தில் தேவதேவனார் மேலுமேலும் அளவுபடாத மகிழ்ச்சி யுறுவர். இறுகிய தயிரும், கருப்பஞ்சாறும், செவ்விய தேனும் பிறவும் கொண்டு அபிடேகம் செய்யின் அளவிறந்த வேள்விகள் அனைத்தும் செய்த பெரும் பயன்கள் கைகூடும். மந்திரத் திருஒற் றாடை சாத்திமான் மதங்கர்ப் பூரஞ் சந்தனக் கலவை சாத்திச் சாந்தாற்றிப் பணிசெய் கிற்போர் தந்திரு மரபிற் கோடி தமர்களை நரகின் நீக்கி இந்துவாழ் சடிலத் தெந்தை இணையடி நீழல் வாழ்வார். 69 | மந்திரத்துடன் திரு ஒற்றாடைகொண்டு ஈரம் புலர்த்திக் கத்தூரியும், பச்சைக் கருப்பூரமும் கலந்த சந்தனக் குழம்பை மட்டித்துத் தொண்டு செய்ய வல்லவர் தம் மரபின் வந்த முன்னர் பாவப்பயனாக நரகிற் கிடப்பவர் கோடி என்னும் அளவினரை நரகினின்றும் எடுத்துச் சந்திரசேகரர் திருவடி நிழலில் வாழ்விப்பவராவார். தாமும் வாழ்வர். நுழையும்நூற் கலிங்கம் வெண்கேழ் நுரைபுரை நறும்பூம் பட்டு விழைதகு தீவில் தந்த விசித்திரப் படங்கள் அன்பான் | |