அந்நகரிலுள்ள மகளிர்தம் முகத்தழகை, நான்கு தலைகளையுடைய பிரமன் நோக்கி, அதுபோல ஒரு வடிவு கண்டதனுள் கண், நுதல் முதலிய அவயவங்காண வேண்டி முதலில் அழகிய கண்களை எழுது மிடத்து மை சிதையப் பழுதுற்ற தென் றொதுக்கியதைச் சந்திரனென்று உலகங்கூறும். உங்கண்-அந்நகர், உகரச் சுட்டு அடுத்து வந்த இடப்பெயர். (அங்கண் இப்படலம் 70ஆம் செய்யுள் போலக்கொள்க) நோக்கு-அழகு, பார்வை, அழகை நோக்கும் பொழுது ஊன்றிப்பார்த்தற்கு இச்சொல் நயமுடையது. கம் கள்-தலைகள். இவ்வ ரைப்பினில் இரவியும் மதியமும் வழியே செவ்வன் ஏகுறா தொதுங்குவ இவர்முகச் சீர்க்கும் பவ்வ நேரகல் அல்குற்கும் வடிவொடு பணைத்தேர் ஒவ்வு றாமைகண் டுட்கொளும் உட்கினால் அன்றே. 84 | இந்நகரில் சூரிய சந்திரர்கள் உரிய வழியில் நேரே (உச்சிவழி) செல்லாது ஒதுங்கிச் செல்லுதல் இங்குள்ள மகளிர் தம் கடலை ஒத்த அகன்ற அல்குற்கும், அழகிய முகத்திற்கும் தேர்த்தட்டினானும், வடிவானும் ஒவ்வுறாமையை உள்ளங்கொள் நாணத்தினால் அல்லவா? காமகோட்டத்திற்கு நேர் மேற்செல்லுதல் தகாதென ஒதுங்குவர் எனக் கந்தபுராணத்தும், திருத்தொண்டர் புராணத்தும் காண்க. உட்கு - அச்சம். தங்கள் வாள்முகம் மதியெனச் சார்தரும் பணிக்குத் துங்க மாடமேல் மின்னனார் வேற்றுமை தோற்றத் திங்கள் மாட்டறி குறியொன்று செய்துவைத் தனரால் அங்கண் மாநிலங் களங்கமென் றிடப்படும் அதுவே. 85 | தங்களுடைய ஒளி பொருந்திய முகங்களைச் சந்திரனென்று மதித்துப் பற்றுதற்குச் சாரும் இராகு என்னும் பாம்பிற்கு உயரிய மாளிகையிடத்திலுள்ள மின்னலையொப்பார் வேற்றுமை புலப்பட அச்சந்திரனிடத்து ஓரடையாளத்தைச் செய்து வைத்தனர். அதனை மக்கள் களங்கம் என்று கூறுவர். மறைந்தி டாமறுப் பயில்மதி முகத்தெழில் பெறாது குறைந்து பார்க்கும்அங் கரிவைமார் கோண்நுதல் கடுப்ப நிறைந்து பார்க்கும்மீண் டவர்முகம் நிகர்ப்பமற் றிவ்வா றறைந்த திங்கள்தோ றலமரும் அக்கரைப் பசுப்போல். 86 | மறையாத களங்கமுடைய சந்திரன், அந்நகர மகளிர் முகத்தழகிற்கு ஒப்புப்பெறாமல் அவர்தம் வளைந்த நெற்றிக்கு ஒப்பாதல் வேண்டிக் குறைந்து ஒப்புப் பார்க்கும். ஒவ்வாமையின், மீளவும் முகத்திற்கு ஒப்புண்டாகக் கலை நிறைந்து நோக்கும். இவ்வாறு கலை நிறைந்து முகத்திற்கு மொவ்வாமையானும், குறைந்து நெற்றிக்கும் ஒவ்வாமையானும் மாதந்தொறும் மறுகும் (சுழலும்); அக்கரைப் பசுவைப்போல. |