நித்தியத் திருநாள் பக்க விழாநிகழ் திங்கட் சாறும் புத்தலர் இளவே னிற்கட் பொருவரும் வசந்தங் கோடை மெத்திய முதுவே னிற்கண் மிதவைநீ ராட்டு மாரி மொய்த்தகார்ப் பருவந் தன்னிற் பவித்திர முதுவி ழாவும். 74 | நாள் விழாவும், பட்ச விழாவும், மாத விழாவும், புதுமை விரிகின்ற இளவேனிற் பருவமாகிய சித்திரை வைகாசிகளில் வசந்த விழாவும், வெயில் மிகுந்த முதுவேனிற் பருவமாகிய ஆனி ஆடி மாதங்களில் தெப்பவிழாவும், மழை செறிந்த கார்காலமாகிய ஆவணி புரட்டாசிகளில் பவித்திரப் பெருவிழாவும், அன்புறு கூதிர்க் காலை ஐப்பசிப் பூரச் சாறு முன்பனிப் பருவந் தன்னில் வைகறை முகிழ்த்த பூசை பின்பனிப் பருவந் தன்னிற் பிறங்குபொன் னூச லாட்டும் என்பன சிறப்பு மாண இயற்றுவோர் வீடு சேர்வார். 75 | காதலர் அன்பு செய்தற்குக் காரணமாகிய கூதிர்ப் பருவமாகிய ஐப்பசியும் கார்த்திகையும் கூடிய மாதங்களில் ஒன்றில் ஐப்பசிப் பூரவிழாவும், முன்பனிப் பருவங்களுள் வரும் மார்கழி தை மாதங்களில் (உஷைக்காலம்) வைகறை வழிபாடும் பின்பனிப் பருவமாகிய மாசி பங்குனியில் சிறந்த பொன்னூஞ்சல் விழாவும் எனப் பெயரிய விழாக்களை மாட்சிமைப்படப் புரிவோர் வீடுறுவர். பொங்கரி பரந்த உண்கட் பூவையோ டொருமா நீழல் தங்கிய பெருமா னார்க்குச் சார்தரும் ஆண்டு தோறும் பங்குனித் திருநாட் செய்கை பழுதழு சிறப்பின் மல்க மங்கல விதியி னாற்றால் விடைக்கொடி வயங்க ஏற்றி. 76 | மதர்த்துச் செவ்வரி பொருந்திய கண்களையுடைய நாகணவாய்ப் பறவையை யொக்கும் அம்மையொடும் மாநீழலில் வீற்றிருக்கும் திருவேகம்பர்க்கு ஆண்டுதோறும் வருகின்ற பங்குனித் திருவிழாவைக் குற்றமற்ற சிறப்பின் விளங்குமாறு மங்கல முறைப்படி இடபக்கொடியை விளங்க ஏற்றி, கலி விருத்தம் முழவந் திண்டிமம் பேரி முரசுசீர் ஒழுகு காகள மாதி உலம்புவ கழிபெ ருங்கடல் காட்ட அதனிடைக் குழுமு பேனமொத் தொண்குடை பம்பிட 77 | மத்தளம், தம்பட்டம், பேரி, முரசம் முதலிய தோற்கருவிகளும், நீண்ட ஊதுகொம்பு முதலிய கருவிகளும் ஒலிப்பன மிகப் பெரிய |