ஒண்டிறல் அன்னோர் பேற்றிற் பதின்மடங் குறுவர் மையல் கொண்டிவை காவா வேந்தர் நிரயமே குளிப்பர் உண்மை. 94 | ஏகாம்பரநாதப் பெருமானார்க்கு இவ்வாறு வழங்கிய பொருள்களை அவ்வழியே பயன்படப் பாதுகாக்கும் அறங்காவலர் கொடையாளரினும் பத்து மடங்கு பயனைப் பெறுவர். செல்வச் செருக்கினால் இவற்றைக் குறிக்கொண்டு காவாத அரசர் சத்தியமாக நரகில் மூழ்குவர். அனந்தரால் அவற்றொன் றேனுங் கவருநர் ஐயமின்றி இனம்பயில் கடும்பி னோடுங் கெடுவரால் இனைய நீரால் தனங்களுங் கிளையுந் துன்றத் தங்குதல் விழையும் வேந்தர் கனம்பயில் பொழில்சூழ் காஞ்சி உறுதியின் வழாது காத்தல் 95 | அறியாமையால் மயங்கிப் பெருமானுடைய பொருள்களுள் ஒன்றை யேனும் வஞ்சித்து நுகர்வோர் சிறிதும் ஐயமின்றிக் குடியொடும் கெடுவர். இவ்வியல்பினால் செல்வமும், குடியும் நீடு வாழ விரும்பும் அரசர் மேகங்கள் தங்கும் சோலைகள் சூழ்ந்த காஞ்சியிலிருந்து சிறிதும் வழுவாது காத்தல் வேண்டும். கச்சியின் வாவி கூவல் கடிபொழில் வகுத்துப் பேணிப் பொச்சமில் சிவநே சர்க்குப் பொருள்நிலம் வதுவை ஈவோர் நிச்சலும் அன்ன தானம் நிகழ்த்துவோர் எய்தும் பேறு பச்சிளங் கொடியின் ஓர்பாற் பகவனே அறியும் மன்னோ. 96 | காஞ்சிமாநகரில் குளம், கிணறு, சோலை இவற்றுள் ஒன்றோ பலவோ அமைத்துப் பின்னும் மெய்யன்பர்க்குப் பொருளும், நிலமும், மணப் பெண்ணும் தந்து காப்போரும் நாடோறும் அன்னதானம் செய்வோரும் அடையும் நற்பயனை இமயவல்லியை ஒருபுடை தழுவிய பெருமானாரே முற்றவும் அறிவர். சொல்லும்இத் தரும வாய்மைத் தொகுதியுள் யாதொன் றானும் வல்லுநர் வல்லா ராக மதிபொதி வேணி யார்க்கு நல்லர சிருக்கை யாய காஞ்சிமா நகரின் ஓர்நாள் அல்லதோர் கணமே யானும் அமர்ந்திடிற் பிறப்பு நீப்பார். 97 | கூறப்பெறும் இத் தருமங்களுள் ஒன்றானும் செய்ய வல்லவராக அன்றி வலியிலராக ஆயினும் பிறையை அணிந்த பெருமானார்க்கு விளங்கி வீற்றிருத்தற் கிடனாகிய காஞ்சியில் ஓர்நாளாயினும் இயலாக்கால் ஒருகணமாயினும் விருப்புற்றுத் தங்கிற் பிறப்பொழிவார். |