776காஞ்சிப் புராணம்


கண்டிகை நீறு தாங்கிக் காலையும் மாலைப் போதும்
அண்டர்கோன் அடிகள் போற்றி அடியவர் பூசை யாற்றித்
தொண்டினால் அங்கண் வைகுந் தூயவர் தமக்கே கம்பத்
தொண்டொடி பாகன் எங்கோன் கருணைகூர்ந் துதவும் முத்தி.   98

     உருத்திராக்க வடமும், விபூதியும் அணிந்து காலை மாலையாகிய
இருபொழுதும் தேவர்பெருமானார் திருவடிகளைத் தொழுது மெய்யன்பர்
பூசனையைப் புரிந்து திருத்தொண்டொடும் அங்கு வாழும் தூயவர்க்கு
ஒள்ளிய தொடியை அணிந்த உமையம்மையார் தலைவனார் அருள்கூர்ந்து
முத்தியை வழங்குவர்.

பற்பல பேசி என்னே பருவரு நிரயத் துன்புந்
துற்றபல் யோனி தோறுஞ் சுழன்றுழல் பிறவி நோயும்
உற்றிடும் ஆண்டாண் டெய்தும் உறுதயர் பலவும் நோக்கி
மற்றிவை யொழிதல் வேட்டோர் காஞ்சியின் வதிதல் வேண்டும்.  99

     பலப் பல கூறிப் பயன் என்னை? நரகத் துன்பமும், செறிந்த பல்வகை
யோனிகளினும் புக்குழலும் பிறவித் துன்பமும் அவ்வவ் வுலகங்களின்
வாழ்க்கைத் துன்பமும் நோக்கி இவற்றை நீக்க விரும்பியவர் காஞ்சியில்
உறைக.

காஞ்சியே கலியில்வசித்தற் கிடமெனல்

கலி விருத்தம்

காமருஞ் சிவிகைகள் காவி யாயினுந்
தோமுறு பிறர்சுமை சுமந்திட் டாயினுஞ்
சாமிஎன் றிழிஞர்தம் பணிசெய் தாயினும்
மாமதிற் காஞ்சியின் வதிதல் வேண்டுமால்.       100

     அழகிய பல்லக்குக்களைச் சுமந்தாயினும், குற்றமிகும் கீழ்மக்களுடைய
சுமையைச் சுமந்தாயினும், இழிஞரைத் தலைவரே எனப்போற்றி அவர்தம்
ஏவல் செய்தாயினும் கூலிபெற்றுப் பெருமதில் சூழ்ந்த காஞ்சியில்
வைகுதலை விரும்புக.

கழுதைமேய்த் தாயினும் மற்றுங் காழ்படும்
இழிதொழில் இயற்றியும் இரந்துண் டாயினும்
ஒழிவறு பத்தியின் உறுதி யாளராய்
வழுவறு காஞ்சியின் வதிதல் வேண்டுமால்.       101

     கழுதையை மேய்ப்பார் ஒருவரும் இலர் ஆகவும் அதனைச்
செய்தாயினும், குற்றமுடைய இழிதொழில் யாதும் செய்தும், இரந்துண்டாயினும்
நீங்காத பேரன்பினால் உறுதிப்பாடுடையராய்க் குற்றமற்ற காஞ்சி மாநகரில்
வைகுதல் செய்ய வேண்டுவது.